டெல்லி வன்முறை : நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி தொடங்கியது. மறுநாள் (பிப்ரவரி-1) மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து விவாதம் நடந்து வந்தது. விவாதத்துக்கு பதில் அளித்து நிர்மலா சீதாராமன் கடந்த 11-ந் தேதி பேசினார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு முடிவுக்கு வந்தது.
அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. இன்று இரண்டாவது அமர்வுக்காக நாடாளுமன்றம் கூடுகிறது. இந்த அமர்வில், டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஏற்பட்ட கலவரங்களில் 45-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புயல் வீசும் என எதிர்பார்க்கப்பட்டது.
டெல்லி வன்முறை குறித்து மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க கோரி காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளன. வட கிழக்கு டெல்லி வன்முறை குறித்து மாநிலங்களவை விவாதிக்க எம்பி திருச்சி சிவா ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.
இதேபோல், டெல்லி வன்முறை தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க ஆம் ஆத்மி, இந்திய கம்யூ.,மார்க்சிஸ்ட் கம்யூ. உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி வன்முறை தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்னால் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
அதுபோல் டெல்லி வன்முறை தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்யக் கோரி ராகுல் காந்தி, சசி தரூர், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களவை இன்று தொடங்கியதும் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி காலமான பீகாரின் வால்மீகி நகரைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தள எம்.பி., பைத்யநாத் பிரசாத் மகாதோவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கபட்டது பின்னர் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
டெல்லி வன்முறைகள் தொடர்பாக விவாதிக்க மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன இதை தொடர்ந்து மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகல் 2 மணிக்கு மக்களவை மீண்டும் கூடியதும் கனிம சட்ட திருத்த மசோதா, 2020 எதிர்க்கட்சியினரின் முழக்கங்களுக்கு இடையே அறிமுகப்படுத்தப்பட்டது.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேரடி வரி விதிப்பு மசோதா, 2020 பற்றி பேசினார். இந்த மசோதாவை பரிசீலிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.நேரடி வரி விதிப்பு மசோதா 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி நிதியமைச்சர் நிரமலா சீதாராமன் மக்களவையில் அறிமுகப்படுத்தினார். வருமான வரி மற்றும் நிறுவன வரி தொடர்பான நிலுவையில் உள்ள வரி சிக்கல்களை தீர்ப்பதற்கான ஒரு வழிமுறையை இந்த மசோதா வழங்குகிறது.
மக்களவையில் நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேசும் போது 1984 இல் 3000 பேர் கொல்லப்பட்ட போது எந்த நடவடிக்கையும் எடுக்காதவர்கள்,இன்று இங்கே ஒரு முரட்டுத்தனத்தை காட்டுகிறார்கள். இந்த அணுகுமுறையை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என கூறினார்.
டெல்லி வன்முறை தொடர்பாக உள்துறை மந்திரி அமித் ஷா ராஜினாமா செய்யக் கோரி மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் பேனர்களை வைத்துக்கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டெல்லி வன்முறை குறித்து முழக்கங்களை எழுப்பினர். சபநாயகர் அவர்களை அமைதி படுத்த முயன்றார். ஆனால் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர் இதனால் மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கபட்டது.
இது போல் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
Related Tags :
Next Story