அமித்ஷா பதவி விலகக்கோரி காங்கிரஸ், திரிணாமுல் எம்.பி.க்கள் போராட்டம்


அமித்ஷா பதவி விலகக்கோரி காங்கிரஸ், திரிணாமுல் எம்.பி.க்கள் போராட்டம்
x
தினத்தந்தி 2 March 2020 10:45 PM GMT (Updated: 2 March 2020 10:02 PM GMT)

அமித்ஷா பதவி விலகக்கோரி காங்கிரஸ், திரிணாமுல் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

புதுடெல்லி,

டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை மந்திரி அமித்ஷா பதவி விலகக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். கண்ணில் கருப்பு துணி கட்டியபடி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை மந்திரி அமித்ஷா பதவி விலகக்கோரி காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சசிதரூர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் கையில் பதாகைகளை ஏந்தி உள்துறை மந்திரி அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அப்போது அவர்கள், ‘இந்தியாவை பாதுகாப்போம், பிரதமர் பதில் அளிக்க வேண்டும், அமித்ஷா பதவி விலக வேண்டும்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்திருந்தனர்.

போராட்டம் குறித்து ஆதிர்ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், ‘வன்முறையால் டெல்லி தீப்பற்றி எரிந்தபோது, ஆமதாபாத் நிகழ்ச்சியில் (நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி) நமது உள்துறை மந்திரி பங்கேற்றிருந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்பது நல்ல விஷயம் தான். ஆனால் பலர் உயிரிழந்தநிலையில் ஆமதாபாத் நிகழ்ச்சியில் பங்கேற்றது தவறு. டெல்லி வன்முறை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். கலவரம் நடந்தபின் 3 நாட்களுக்கு பின்னர் மோடி பேசினார். ஆனால் இதுவரை அமித்ஷா எதுவும் பேசவில்லை’ என்று தெரிவித்தார்.

இதேபோல் டெல்லி வன்முறை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அல்லது ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.



 


திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கண்களில் கருப்புதுணியை கட்டியபடியும், வாயை விரலால் மூடியபடியும் நாடாளுமன்ற வளாகத்தில் நூதன முறையில் போராட்டம் நடத்தினர். டெல்லி வன்முறையை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை என்பதையும், அது பற்றி பேச மறுக்கிறது என்பதையும் தெரிவிக்கும் வகையில் இந்த நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டதாக அக்கட்சி எம்.பி.க்கள் தெரிவித்தனர்.


Next Story