‘பிட்காயின்’ வர்த்தகத்துக்கு தடை நீக்கம்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு


‘பிட்காயின்’ வர்த்தகத்துக்கு தடை நீக்கம்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
x
தினத்தந்தி 4 March 2020 7:53 AM GMT (Updated: 4 March 2020 9:36 PM GMT)

‘பிட்காயின்’ வர்த்தகத்துக்கு ரிசர்வ் வங்கி விதித்த தடையை சுப்ரீம் கோர்ட்டு நீக்கியது.

புதுடெல்லி,

கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பாணை ஒன்றில் ‘பிட்காயின்’ என்னும் மெய்நிகர் டிஜிட்டல் கரன்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த அறிவிப்பாணைக்கு எதிராக இன்டர்நெட் அண்டு மொபைல் அசோஷியேசன் ஆப் இந்தியா என்னும் அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

கிரிப்டோகரன்சி (பிட் காயின்) என்பது ஒரு பண்டம். அதனை பணம் (கரன்சி) என்று கருத முடியாது. ரிசர்வ் வங்கிக்கு பணம் தொடர்பான விவகாரங்களில் தலையிடுவதில் மட்டுமே அதிகாரம் உள்ளது. தற்போதைய நிலையில் கிரிப்டோகரன்சி தொடர்பாக எந்தவித முறையான சட்டங்களும் இயற்றப்படாத நிலையில் ரிசர்வ் வங்கி இப்படி தன்னிச்சையாக அதற்கு தடை விதிக்க முடியாது.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இதற்கு எதிராக ரிசர்வ் வங்கி தரப்பில் முன்வைத்த வாதத்தில், “கடந்த 2013-ம் ஆண்டு முதல் கிரிப்டோகரன்சி குறித்து ரிசர்வ் வங்கி அனைத்து வகையிலும் கவனமாக இருந்து வருகிறது. கிரிப்டோ கரன்சி என்பது டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தின் ஒரு பிரிவுதான். அதனை ஆரம்பத்திலேயே சரி செய்யாவிட்டால், நாட்டில் பணப் பரிமாற்ற முறையில் பெருத்த தாக்கம் ஏற்படுத்தும்.

எனவே பொதுநலனை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கியால் கிரிப்டோகரன்சி குறித்து உரிய முடிவெடுக்க முடியும்” என்று வாதிடப்பட்டது.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், அனிருத்தா போஸ், வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி ரோகின்டன் பாலி நாரிமன் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பில், ‘பிட்காயின்’ போன்ற கிரிப்டோ கரன்சி மூலம் வர்த்தகம் செய்யலாம் எனவும், வங்கிகளும் கிரிப்டோ கரன்சி மூலம் பரிமாற்றம் செய்ய அனுமதிக்கலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பாணையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.


Next Story