டெல்லி கலவரம் குறித்த காட்சிகளை வெளியிட்டது டெல்லி போலீஸ்


டெல்லி கலவரம் குறித்த காட்சிகளை வெளியிட்டது டெல்லி போலீஸ்
x
தினத்தந்தி 5 March 2020 10:46 AM GMT (Updated: 5 March 2020 10:46 AM GMT)

டெல்லி கலவரம் குறித்த காட்சிகளை டெல்லி போலீஸ் வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த 24-ந்தேதி ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக மாறி கல்வீச்சு, தீவைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. 4 நாட்கள் நடைபெற்ற இந்த கலவரத்தில் 48 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், 24ம் தேதி நடந்த கலவரம் குறித்த வீடியோ காட்சிகளை டெல்லி போலீஸ் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் பதிவாகியுள்ள காட்சிகள்:

டெல்லியின் வடகிழக்கு பகுதியான சாந்த் பாக் பகுதியில் கலவரம் உச்சகட்டத்தில் இருந்த போது, பாதுகாப்பு பணியில் இருந்த 50 போலீசாரை ஆயிரகணக்கான வன்முறையாளர்கள் இரு புறமும் இருந்து வேகமாக ஓடிவந்து தாக்குகின்றனர்.  நடுவில் மாட்டி கொண்ட போலீசார், கண்ணீர் புகை குண்டுகளை வெடிக்க செய்து தப்ப முயற்சிக்கின்றனர். இதனால், பின்வாங்கிய கலவரக்காரர்கள் மீண்டும் வந்து போலீசாரை விரட்டி விரட்டி கம்புகளை கொண்டும், கற்களை கொண்டும் தாக்குகின்றனர். 

பாரிகாட் அமைக்கப்பட்ட சாலையில் இருந்து மற்றொரு சாலைக்கு ஒரு வழியாக தப்பி சென்ற போலீசார் மரங்கள் நிறைந்த பகுதியில் பாதுகாப்பாக பதுங்கினர். இந்த காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது.

மேலும், இந்த வீடியோ காட்சிகளில் காயமடைந்த போலீஸ் அதிகாரி அமித் ஷர்மாவை, மற்ற போலீசார் பாதுகாப்பாக அழைத்து செல்வதும், வன்முறையின் போது பெண்களும் கற்களை வீசி தாக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

Next Story