இறைச்சி உணவுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவாது - மத்திய மந்திரி உறுதி
கொரோனா வைரஸ் இறைச்சி உணவுகள் மூலம் பரவாது, எனவே பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என மத்திய மந்திரி கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவிவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக மத்திய அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி இத்தாலி, ஈரான், தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளில் இருந்து வருவோருக்கு விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளது.
இந்நிலையில் இது குறித்து மத்திய கால்நடை மற்றும் மீன்வளத்துறை மந்திரி கிரிராஜ் சிங் கூறியதாவது:
இறைச்சி, முட்டை, மீன் போன்ற அசைவ உணவுகள் மூலம் கொரோனா வைரஸ் (கோவிட் -19) பரவாது என்பதை கால்நடை வளர்ச்சித்துறை ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது. எனினும் மக்களிடம் தவறான கருத்துகள் பரவி வருகின்றன. கொரோனா வைரஸ் குறித்த சரியான புரிதல் இல்லாததால் சிலர் தவறான கருத்துக்களை பரப்புகின்றனர். எனவே இறைச்சி உணவுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவாது.
இறைச்சி காரணமாக கொரோனா பரவுவதை தடுக்க லக்னோவில் இறைச்சி விற்க மாவட்ட கலெக்டர் தடை விதித்துள்ளது குறித்து அறிந்தேன். கொரோனா வைரஸ் குறித்து எந்தவொரு ஆலோசனையையும் வெளியிடுவதற்கு முன் மத்திய அரசு, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர்) உடன் கலந்தாலோசித்து அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story