குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்களை உடனடியாக விசாரிக்க முடியாது; சுப்ரீம் கோர்ட்டு தகவல்


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்களை உடனடியாக விசாரிக்க முடியாது; சுப்ரீம் கோர்ட்டு தகவல்
x
தினத்தந்தி 6 March 2020 5:22 AM IST (Updated: 6 March 2020 5:22 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்களை உடனடியாக விசாரிக்க முடியாது எனவும், சபரிமலை வழக்கை முடித்த பின்னரே விசாரிக்க முடியும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

புதுடெல்லி, 

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து வந்து குடியேறி உள்ள முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இதற்கிடையே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ், தி.மு.க., ராஷ்ட்ரீய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மற்றும் அனைத்து அசாம் மாணவர்கள் சங்க அமைதிக்கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.

மொத்தத்தில் இந்த சட்டத்துக்கு எதிராக 140 ரிட் மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மனுக்களிலும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டு உள்ளது.

குறிப்பாக, “இந்த சட்டம், இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது. இந்த சட்டத்தின் பலன் இந்துகள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜைன மதத்தினர், பார்சிக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு கிடைக்கிற நிலையில், முஸ்லிம்களுக்கு மறுப்பது வெளிப்படையாகவே பாரபட்சம் காட்டும் நோக்கத்துடன் உள்ளது. இது சமத்துவத்துக்கான அடிப்படை உரிமையை மீறுகிறது. மதத்தின் அடிப்படையில் விலக்கு அளிப்பதன் மூலம், சட்ட விரோதமாக குடியேறியவர்களில் ஒரு பிரிவினருக்கு குடியுரிமை அளிப்பதை இந்த சட்டம் நோக்கமாக கொண்டுள்ளது” என்று அந்த மனுக்களில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த ஜனவரி 22-ந் தேதி தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது அனைத்து மனுக்கள் மீதும் 4 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு, இந்த வழக்கு விசாரணை 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

ஆனால் இதுவரை மத்திய அரசு சார்பில் இந்த மனுக்களுக்கு பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வில் மூத்த வக்கீல் கபில்சிபல் ஆஜராகி இந்த மனுக்களை விரைந்து விசாரிக்கும் வகையில் பட்டியலிட வேண்டும் என்று முறையிட்டார். மேலும் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யாததையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதற்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, தற்போது இந்த மனுக்களை அவசர வழக்காக பட்டியலிட முடியாது என்றும், ஹோலி விடுமுறைக்கு பிறகு மீண்டும் முறையிடுமாறும் கூறினார். மேலும் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு சபரிமலை தொடர்பான வழக்கை விசாரித்து முடித்த பின்னர் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

சுப்ரீம் கோர்ட்டின் ஹோலி விடுமுறை வருகிற 9-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி முடிவடைவது குறிப்பிடத்தக்கது.

Next Story