கொரோனா வைரஸ்: மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - உத்தவ் தாக்ரே


கொரோனா வைரஸ்:  மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - உத்தவ் தாக்ரே
x
தினத்தந்தி 6 March 2020 12:54 AM GMT (Updated: 6 March 2020 12:54 AM GMT)

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அடுத்த 8 நாட்கள் மிக முக்கியமானவை. எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவுறுத்தி உள்ளார்.

மும்பை,

கொரோனா உயிர்கொல்லி வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. நமது நாட்டிலும் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டு உள்ளனர். மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா வைரஸ் குறித்து நேற்று சட்டசபையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மும்பை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா வைரஸ் அறிகுறியுடன் 167 பேர் தனிமைபடுத்தப்பட்டனர். அவர்களில் 9 பேர் தான் தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை மராட்டியத்தில் இந்த நோய் தொற்று உறுதிபடுத்தப்படவில்லை. இது தொடர்பாக மக்கள் பீதி அடைய வேண்டாம்.

மக்கள் கூட்டம் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்கலாம். ஹோலி கொண்டாட்டத்தை கட்டுப்படுத்தி கொள்ளலாம். ஹோலி தீயில் கொரோனா வைரஸ் எரிக்கப்பட வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன்.அடுத்த 8 நாட்கள் மிக முக்கியமான நாட்கள். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பயப்படாமல் நெருக்கடியை சமாளிக்க வேண்டும். மும்பை, நாக்பூர், புனேயில் கொரோனா வைரஸ் பரிசோதனை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. போதுமான முககவசங்கள் உள்ளன. மும்பையில் காலியாக உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையை தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளுக்கு பயன்படுத்த முடியுமா என்பது குறித்து ஆராயப்படுகிறது.

மாநிலத்தின் பல்வேறு விமான நிலையங்களில் தரையிறங்கும் விமானங்களை துப்புரவு செய்யும் ஊழியர்களுக்கு தேவையான ஆடைகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன். ஓட்டல்களில் தங்கியிருக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொரோனா பரிசோதனை செய்தார்களா என்பதை ஓட்டல்கள் நிர்வாகத்தினர் உறுதி செய்ய வேண்டும்.

ரெயில் மற்றும் பஸ் நிலையங்களில் இந்த நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு தகவல் மற்றும் விளம்பரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது”இவ்வாறு அவர் கூறினார்.

Next Story