கொரோனா எதிரொலி: மாதா அமிர்தானந்த மயி மடத்திற்கு வரும் பக்தர்கள் வருகை நிறுத்தம்
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு கேரளாவில் உள்ள மாதா அமிர்தானந்த மயி மடத்தில் பக்தர்கள் வருகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருவனந்தபுரம்,
சீனா உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் இதுவரை 98,424 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சீனாவில் மட்டும் 3042 பேர் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் 3,386 பேர் பலியாகி உள்ளனர். 55,638 பேர் இந்த நோயில் இருந்து குணமாகி உள்ளனர். இந்தியாவில் 31 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 3 மாதங்களாக உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா 6 கண்டங்கள் மற்றும் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் தன் கோர முகத்தை காட்டி உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கையாக மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோன வைரஸ் பரவுவதை தடுக்க பொது இடங்களில் மக்கள் கூட வேண்டாம் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு கேரளாவில் உள்ள மாதா அமிர்தானந்த மயி மடத்தில் பக்தர்கள் வருகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள மாதா அமிர்தானந்த மயி மடத்திற்கு உள்நாட்டு பக்தர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பக்தர்களும் ஏராளமான அளவில் வருகை தருகின்றனர். கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் இதனை தடுக்கும் பொருட்டு இந்த முடிவை மாதா அமிர்தானந்த மயி மடம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story