டெல்லி வன்முறை சம்பவம்: நாடாளுமன்றத்தில் பதில் அளிக்கிறார் - அமித்ஷா
டெல்லி வன்முறை சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் வரும் 11ம் தேதி நடக்கும் விவாதத்தில் எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விளக்கம் அளிக்க உள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த 24-ந்தேதி ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக மாறி கல்வீச்சு, தீவைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. 4 நாட்கள் நடைபெற்ற இந்த கலவரத்தில் 53 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த வன்முறை தொடர்பாக, விவாதம் நடத்தக் கோரியும், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பதவி விலக வேண்டுமென வலியுறுத்தியும், எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட அமளியால், 5வது நாளான இன்றும், மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளும் முடங்கியது. அமளி தொடர்ந்ததால் இரு அவைகளும், மார்ச் 11ம் தேதி காலை 11 வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி வன்முறை, உயிரிழப்புகள் மற்றும் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, மார்ச் 11ம் தேதி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு, அன்றைய தினம் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பதில் அளிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.
மத்திய நிலக்கரித் துறை மந்திரியும், நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரியுமான பிரல்ஹாத் ஜோஷி கூறுகையில்,
அவையில் குறுக்கிடமால் எதிர்க்கட்சிகள் விவாதத்தில் பங்கேற்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். டெல்லியில் தற்போது இயல்புநிலை திரும்பி உள்ளது. டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக பங்கேற்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார்.
Related Tags :
Next Story