யெஸ் வங்கியில் கடன் வழங்க ரூ.600 கோடி லஞ்சம்: ராணா கபூர், மனைவி - 3 மகள்கள் மீதும் சி.பி.ஐ. வழக்கு


யெஸ் வங்கியில் கடன் வழங்க ரூ.600 கோடி லஞ்சம்: ராணா கபூர், மனைவி - 3 மகள்கள் மீதும் சி.பி.ஐ. வழக்கு
x
தினத்தந்தி 9 March 2020 10:45 PM GMT (Updated: 9 March 2020 9:40 PM GMT)

யெஸ் வங்கியில் கடன் வழங்க ரூ.600 கோடி லஞ்சம் பெற்றதாக ராணா கபூர், அவரது மனைவி, 3 மகள்கள் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து, அவர்களுக்கு சொந்தமான 7 இடங்களில் தீவிர சோதனை நடத்தியது.

புதுடெல்லி,

மும்பையை தலைமையகமாக கொண்டு இயங்கி வந்த யெஸ் வங்கி மற்ற வங்கிகளால் மறுக்கப்பட்ட பெரிய நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதால் அந்த கடன்கள் திரும்பி வராமல் நிதி நெருக்கடியில் சிக்கியதாக புகார் எழுந்தது. யெஸ் வங்கியின் நிறுவனராக ராணா கபூர் (வயது 62) செயல்பட்டு வந்தார்.

இதைத்தொடர்ந்து யெஸ் வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததுடன், வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்று கட்டுப்பாடும் விதித்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

இந்த விசாரணையில் யெஸ் வங்கி டி.எச்.எப்.எல். என்ற அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமான நிறுவனத்திற்கு பெருமளவில் கடன் வழங்கியதும், அதற்காக ராணா கபூரின் குடும்பத்தினருக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் முறைகேடான வழிகளில் கொடுக்கப்பட்டதும் தெரியவந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை ராணா கபூரை கைது செய்தது.

இந்த நிலையில் சி.பி.ஐ.யும் ராணா கபூர் மீதான லஞ்ச புகார் குறித்தும், யெஸ் வங்கி முறைகேடு குறித்தும் நேற்று விசாரணை நடத்தியது. விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் கூறியதாவது:-

யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர், டி.எச்.எல்.எப். நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் நிறுவனர் கபில் வாதவான் என்பவருடன் இணைந்து ஒரு சதித்திட்டம் தீட்டினார். ராணா கபூரின் யெஸ் வங்கியில் இருந்து டி.எச்.எல்.எப். நிறுவனத்துக்கு கடன்களாக வழங்குவதாகவும், அந்த தொகை ராணா கபூரின் மகள்களுக்கு சொந்தமான ‘டோல்ட் அர்பன் வெஞ்சர்ஸ்’ என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் திட்டம் தீட்டினர்.

அதன்படி யெஸ் வங்கி 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் டி.எச்.எல்.எப். நிறுவனத்துக்கு ரூ.3,700 கோடி குறுகியகால கடன்களாக வழங்கியது. அதேபோல டி.எச்.எல்.எப். நிறுவனத்துடன் தொடர்புடைய, தீரஜ் வாதவான் இயக்குனராக உள்ள ‘ஆர்.கே.டபிள்யூ. டெவலப்பர்ஸ்’ என்ற நிறுவனத்துக்கு ரூ.750 கோடி கடன் வழங்கியது.

அந்த ரூ.750 கோடியும் டி.எச்.எல்.எப். நிறுவனத்துக்கு அதன் ‘பாந்த்ரா மீட்பு திட்டத்துக்காக’ வழங்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தில் ஆர்.கே.டபிள்யூ. நிறுவனம் எந்த முதலீடும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யெஸ் வங்கியின் இந்த பணத்தை திருப்பித்தருவதற்கு பதிலாக கபில் வாதவான் (டி.எச்.எல்.எப். நிறுவனர்) ராணா கபூரின் மகள்களுக்கு சொந்தமான டோல்ட் அர்பன் வெஞ்சர்ஸ் நிறுவனத்தில் ரூ.600 கோடி முதலீடு செய்தது. இந்த தொகை யெஸ் வங்கியின் கடன்களுக்காக கொடுக்கப்பட்ட லஞ்சமாக கருதப்படும் என்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் கூறினர்.

டி.எச்.எல்.எப். தனது மொத்த வங்கி கடன் தொகை ரூ.97 ஆயிரம் கோடியில், ரூ.31 ஆயிரம் கோடியை (ராணா கபூருக்கு சொந்தமானதாக கருதப்படும்) பல பினாமி நிறுவனங்களுக்கு மாற்றியுள்ளதும் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக ராணா கபூர், அவரது மனைவி பிந்து, மகள்கள் ரோஷிணி கபூர், ராகீ கபூர், ராதா கபூர், கபில் வாதவான் (டி.எச்.எல்.எப்.), தீரஜ் வாதவான் (ஆர்.கே.டபிள்யூ.) என 7 தனிநபர்கள் மீதும், 5 நிறுவனங்கள் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. அடையாளம் தெரியாத சில நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த 5 நிறுவனங்கள் டி.எச்.எப்.எல்., ஆர்.கே.டபிள்யூ. டெவலப்பர்ஸ், டோல்ட் அர்பன் வெஞ்சர்ஸ், ஆர்.ஏ.பி. எண்டர்பிரைசஸ் (பிந்து இயக்குனராக உள்ளார்), மோர்கன் கிரெடிட்ஸ் (ராணா கபூரின் மகள்கள் இயக்குனர்கள்) ஆகும்.

சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் மும்பையில் உள்ள குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகள், அலுவலகங்கள் ஆகிய 7 இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.

அமலாக்கத்துறையும் யெஸ் வங்கி முறைகேடுகள் குறித்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. ராணா கபூரின் குடும்பத்தினர் முறைகேடான பணபரிவர்த்தனை மூலம் இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளில் பல்வேறு சொத்துகளை வாங்கியுள்ளதாக தெரிகிறது. வெளிநாடுகளில் உள்ள அவர்களின் சொத்துகள் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அவர்களது 12-க்கும் மேற்பட்ட பினாமி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள ரூ.2 ஆயிரம் கோடி மற்றும் அந்த நிறுவனங்கள் மூலம் நடைபெற்றுள்ள ரூ.4,500 கோடி பரிவர்த்தனை ஆகியவை குறித்தும் அதிகாரிகள் விசாரணையில் இறங்கியுள்ளனர். அதோடு அவர்களிடம் 44 விலை உயர்ந்த ஓவியங்கள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதில் ஒரு ஓவியம் சோனியா காந்தியின் மகள் பிரியங்காவிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளது. அது பிரபல ஓவியர் எம்.எப்.உசேன் வரைந்த ராஜீவ் காந்தியின் ஓவியம் ஆகும். இது 1985-ம் ஆண்டு காங்கிரஸ் நூற்றாண்டு விழாவின்போது பிரியங்காவுக்கு பரிசாக வழங்கப்பட்டதாகும். இந்த ஓவியங்கள் குறித்தும் அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது.

இதுபற்றி விளக்கம் அளித்துள்ள காங்கிரசார், இந்த ஓவியத்தை ராணா கபூருக்கு ரூ.2 கோடிக்கு பிரியங்கா விற்றார். இதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. இதற்காக பிரியங்கா ரூ.2 கோடி காசோலையாக வாங்கியுள்ளார். இது வருமான வரி கணக்கிலும் காட்டப்பட்டுள்ளது என்றனர்.

யெஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி ரவ்னீத் கில் என்பவரையும் அமலாக்கத்துறையினர் தங்கள் அலுவலகத்துக்கு வரவழைத்து வங்கி முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தினர்.

யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ஏற்கனவே வங்கியின் நடவடிக்கைகளில் அதிருப்தியுடன் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வாடிக்கையாளர்கள் வங்கியில் இருந்து ரூ.18,100 கோடியை எடுத்துள்ளனர்.

வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ராணா கபூரின் குடும்பத்தினர் உள்பட 7 பேரும் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாதவாறு தடுப்பதற்காக தேடப்படும் குற்றவாளிகளாக (லுக் அவுட்) சி.பி.ஐ.யால் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பு அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.


Next Story