டெல்லி வன்முறை: 690 வழக்குகள் பதிவு


கோப்புக்காட்சி
x
கோப்புக்காட்சி
தினத்தந்தி 10 March 2020 11:47 AM IST (Updated: 10 March 2020 11:47 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் கலவரம் தொடர்பாக 690 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

டெல்லி ஷாகீன்பாக்கில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வந்த நிலையில், வடகிழக்கு டெல்லியின் ஜாப்ராபாத், மாஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன.  இந்த போராட்டத்துக்கு எதிராக, மற்றொரு பிரிவினரும் கடந்த பிப்ரவரி 23ந்தேதி போராட்டம் நடத்த முயன்றனர்.

இதில் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர். ஆனால் இந்த மோதல் மறுநாளில் மிகப்பெரும் வன்முறையாக வெடித்தது. ஜாப்ராபாத், மாஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா, யமுனா விகார் என வடகிழக்கு டெல்லி முழுவதும் வன்முறை பரவியது.

சில இடங்களில் துப்பாக்கிச்சூடும் நடந்தது. இதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். தலைமை காவலர் மற்றும் உளவு பிரிவு அதிகாரி உள்பட பல உயிரிழப்புகளும் நிகழ்ந்தன.  இந்த வன்முறையில்  53 பேர் உயிரிழந்தனர். 

இந்நிலையில் வன்முறை தொடர்பாக டெல்லி காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

690 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 2 ஆயிரத்து 200 பேரை பிடித்து விசாரணை செய்ததாகவும், அதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் வன்முறையில் கொல்லப்பட்ட தில்பார் சிங் நேகி கொலை தொடர்பாக  ஷாஹனா வாஸ் என்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story