மத்திய பிரதேசத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்த எம்.எல்.ஏ.
மத்திய பிரதேசத்தில் எம்.எல்.ஏ. லால் சாகு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்து உள்ளார்.
புதுடெல்லி,
மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. எதிர்க்கட்சியாக பா.ஜ.க. இருந்து வருகிறது. இந்நிலையில், மத்திய பிரதேச முன்னாள் முதல் மந்திரியான திக்விஜய் சிங் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறினார்.
அவர் கூறும்பொழுது, மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. எதிர்க்கட்சியாக ஆனதில் இருந்து, மாநிலத்தில் கடந்த 15 வருடங்களாக கொள்ளையடித்து சுருட்டிய சிவராஜ் சிங் சவுகான், நரோட்டம் மிஷ்ரா உள்ளிட்ட அனைவரும் வெளிப்படையாக ரூ.25 கோடி முதல் ரூ.35 கோடி வரை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் கொடுத்து தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கின்றனர்.
இதன்படி முதல் தவணையாக ரூ.5 கோடியும், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் நியமனத்திற்கு பின்னர் 2வது தவணை தொகையும், பின்பு மத்திய பிரதேச அரசு கவிழ்ந்த பின்னர் இறுதி தவணை தொகையும் தரப்படும் என குற்றச்சாட்டு கூறினார்.
இதனால் மத்திய பிரதேச முதல் மந்திரியாக வந்து விடுவதுடன், துணை மந்திரியாக மிஷ்ராவை கொண்டு வந்து விடலாம் என சவுகான் கனவு காண்கிறார் என்றும் கூறினார்.
எனினும், இதனை சவுகான் மறுத்து வந்துள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து ஜோதிர் ஆதித்யா சிந்தியா இன்று ராஜினாமா செய்துள்ளார். இதுபற்றி அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு தனிப்பட்ட முறையில் கடிதமும் அனுப்பி உள்ளார்.
சிந்தியாவை தொடர்ந்து மற்றொரு எம்.எல்.ஏ. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ளார். இதுபற்றி பா.ஜ.க. தலைவர் சிவராஜ் சிங் சவுகான் இன்று கூறும்பொழுது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் எம்.எல்.ஏ.வான பிசாகு லால் சாகு ஜி எங்களுடன் உள்ளார். அவர் பா.ஜ.க.வில் சேர்ந்து இருக்கிறார் என்று கூறினார்.
லால் சாகு தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததுடன், காங்கிரசில் இருந்தும் விலகியுள்ளார். இதுபற்றி அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்பொழுது, நான் பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன். வருகிற நாட்களில் பல காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து விலகுவார்கள். கமல்நாத் அரசின் செயல்பாடுகளால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story