கேரளாவில் 3 வயது சிறுமியின் பெற்றோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி


கேரளாவில் 3 வயது சிறுமியின் பெற்றோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 10 March 2020 4:26 PM GMT (Updated: 10 March 2020 4:26 PM GMT)

கேரளாவில் 3 வயது சிறுமியின் பெற்றோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரம்,

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், இந்தியா உள்பட 104 நாடுகளில் பரவியுள்ளது.   இந்தியாவில் முதலில் கேரள மாநிலத்தில் 3 பேருக்கு இந்நோய் தாக்கியது.  அவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.  பின்னர் நோய் பாதிப்பின் தீவிரம் குறைந்தது.  இதனால் கேரளாவில் அறிவிக்கப்பட்ட மாநில பேரிடர் தளர்த்தி கொள்ளப்பட்டது.

இதன்பின் டெல்லி, உத்தர பிரதேசம், கர்நாடகா என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வைரஸ் கண்டறியப்பட்டது.  இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை நேற்று வரை 45 ஆக உயர்ந்திருந்தது.  தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரித்து இன்று 56 ஆனது.

இந்நிலையில், கேரளாவில் 3 வயது சிறுமியின் பெற்றோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி கேரள சுகாதார மந்திரி கே.கே. சைலஜா கூறும்பொழுது, இத்தாலியில் இருந்து கேரளா திரும்பிய 3 வயது சிறுமிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சிறுமியின் பெற்றோருக்கும் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  அவர்களது நிலைமை சீராக உள்ளது என கூறினார்.

இத்தாலியில் இருந்து கேரளா திரும்பிய தம்பதியின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அவர்களது மகன் என 6 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு இருந்தது.

Next Story