ஜோதிர் ஆதித்ய சிந்தியா, காங்கிரசில் இருந்து ராஜினாமா: நீக்கியதாக கட்சி மேலிடம் அறிவிப்பு


ஜோதிர் ஆதித்ய சிந்தியா, காங்கிரசில் இருந்து ராஜினாமா: நீக்கியதாக கட்சி மேலிடம் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 March 2020 10:45 PM GMT (Updated: 10 March 2020 9:09 PM GMT)

ஜோதிர் ஆதித்ய சிந்தியா, காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்தார். ஆனால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மேலிடம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியில் கடந்த சில நாட்களாக குழப்பம் நிலவி வந்தது. மூத்த தலைவரான கமல்நாத் முதல்-மந்திரி பதவியையும், மாநில கட்சி தலைவர் பதவியையும் வகித்து வருகிறார். அவரிடம் இருந்து கட்சி தலைவர் பதவியை கைப்பற்ற இளம் தலைவரான ஜோதிர் ஆதித்ய சிந்தியா முயற்சித்தாலும், மேலிடம் அசைந்து கொடுக்கவில்லை.

நேற்று முன்தினம் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 17 பேருடன் மாயமானதாக தகவல்கள் வெளிவந்தன. இதனால் கமல்நாத் அரசுக்கு ஆபத்து உருவானது.

இந்த நிலையில் ஒரு திடீர் திருப்பமாக ஜோதிர் ஆதித்ய சிந்தியா, காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இதையொட்டி அவர் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு மார்ச் 9-ந் தேதியிட்ட கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

கடந்த 18 ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்து வந்துள்ளேன். இப்போது இதில் இருந்து விலகிச்செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது.

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நான் விலகுகிறேன். கடந்த ஆண்டே இதற்கான பாதை தானாகவே உருவாகி விட்டது என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.

ஆரம்பத்தில் இருந்து எப்போதுமே எனது நோக்கம், என் மாநில மக்களுக்கும், நாட்டுக்கும் தொண்டு ஆற்றுவதுதான். ஆனால் அதை இந்த கட்சியில் இருந்து இனி நான் செய்ய முடியாது என்று நம்புகிறேன்.

எனது மக்கள் மற்றும் தொண்டர்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கவும், நிறைவேற்றவும் நான் புதிய பாதையில் பயணிப்பதுதான் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இந்த நாட்டுக்கு இதுவரை சேவை ஆற்றுகிற வாய்ப்பினை தந்தமைக்காக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அதில் அவர் கூறி உள்ளார்.

ஒரு காலத்தில் சோனியா காந்தி குடும்பத்துக்கு நெருக்கமாகவும், மத்திய மந்திரியாகவும் திகழ்ந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கடந்த 2018-ம் ஆண்டு நடந்த மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றபோது முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் இருந்தார்.

ஆனால், மூத்த தலைவரான கமல்நாத்தை முதல்-மந்திரி ஆக்கியதில் இருந்து ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு மேலிடம் மீது அதிருப்தி நிலவி வந்தது. மாநில கட்சி தலைவர் பதவியையும் தராததால் அதிருப்தி மேலும் அதிகரித்தது.

ஜோதிர் ஆதித்ய சிந்தியா காங்கிரசில் இருந்து விலகி விட்டதாக கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பிய நிலையில், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மேலிடம் அறிவித்துள்ளது.

இதையொட்டி கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் விடுத்துள்ள அறிக்கையில், “கட்சி விரோத செயல்பாடுகளுக்காக காங்கிரசில் இருந்து ஜோதிர் ஆதித்ய சிந்தியா உடனடியாக நீக்கப்படுகிறார். இதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்” என கூறப்பட்டுள்ளது.

ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் ராஜினாமா கடிதம் மார்ச் 9-ந் தேதியிடப்பட்டிருந்தாலும், அது கட்சி தலைவர் சோனியா காந்தியின் இல்லத்துக்கு நேற்று மதியம் 12.20 மணிக்குத்தான் கிடைத்ததாக அந்த கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.


Next Story