ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு ஆதரவாக 22 எம்.எல்.ஏ.க்கள் திடீர் ராஜினாமா: காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்தது


ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு ஆதரவாக 22 எம்.எல்.ஏ.க்கள் திடீர் ராஜினாமா: காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்தது
x
தினத்தந்தி 11 March 2020 5:45 AM IST (Updated: 11 March 2020 8:49 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேச மாநிலத்தில் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு ஆதரவாக 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீரென ராஜினாமா செய்தனர். இதனால் அங்கு அந்த கட்சி அரசு மெஜாரிட்டியை இழந்தது.

போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தில், 15 ஆண்டுகளுக்கு பிறகு 2018-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.

230 இடங்களைக் கொண்ட மத்திய பிரதேச மாநில சட்ட சபைக்கு 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடந்தது.

இதில், 114 இடங்களை வென்று காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வந்தது. பாரதீய ஜனதா கட்சிக்கு 109 இடங்கள் கிடைத்தன.

சமாஜ்வாடி கட்சியின் 1 எம்.எல்.ஏ., பகுஜன் சமாஜ் கட்சியின் 2 எம். எல்.ஏ.க்கள், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் என 121 பேரின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.

அப்போது முதல்-மந்திரி பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கமல்நாத்துக்கும், இளைய தலைவரும், குவாலியர் அரச குடும்பத்தை சேர்ந்தவருமான ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதில், மேலிடத்தின் ஆதரவுடன் கமல்நாத் முதல்- மந்திரி பதவியை பிடித்தார். அதைத் தொடர்ந்து மாநில கட்சி தலைவர் பதவியை, அவரிடம் இருந்து கைப்பற்ற ஜோதிர் ஆதித்ய சிந்தியா முயற்சித்தும் அதில் வெற்றி கிடைக்கவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் இருந்து வந்தார்.

எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியதுபோல, அவரது ஆதரவு மந்திரிகள் 6 பேர், முதல்-மந்திரி கமல்நாத்தால் ஓரங்கட்டப்பட்டனர். இது ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை அதிருப்தியின் உச்சத்துக்கு அழைத்துச்சென்றது.

இதற்கிடையே அந்த மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 3 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 26-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது. அதில் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் தலா ஒரு இடத்தை எளிதாக கைப்பற்ற முடியும்.

மூன்றாவது இடத்தை கைப்பற்ற பாரதீய ஜனதா கட்சி விரும்புகிறது. அதற்கு அந்த கட்சிக்கு கூடுதலாக 9 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலை உருவாகி உள்ளது.

இந்த பரபரப்பான சூழலில், ஜோதிர் ஆதித்ய சிந்தியாவும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க் கள் 17 பேரும் மாயமானதாக நேற்று முன்தினம் அதிர்ச்சி தகவல் வெளியானது.

ஆனால் மாயமான எம்.எல். ஏ.க்கள் எண்ணிக்கை 19 எனவும், அவர்கள் அனைவரும் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெறுகிற கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் தேவனஹள்ளி பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், நாடு முழுவதும் நேற்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு கொண்டிருந்தபோது, தலைநகர் டெல்லியில் அதிரடி திருப்பங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அரங்கேறின.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில், ஜோதிர் ஆதித்ய சிந்தியா காலையில் சந்தித்து பேசினார்.

அதைத் தொடர்ந்து அவர், அமித்ஷாவுடன் பிரதமரின் இல்லத்துக்கு சென்றார். அங்கு அவர்கள், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இந்த சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

அடுத்த சில நிமிடங்களில் காங்கிரசில் இருந்து ஜோதிர் ஆதித்ய சிந்தியா விலகினார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ தலைவர் சோனியா காந்திக்கு கொடுத்து அனுப்பினார்.

ஆனால் இந்த அதிரடி திருப்பங்களால் அதிர்ச்சியின் உச்சத்துக்கு சென்ற காங்கிரஸ் தலைமை, கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை கட்சியை விட்டு உடனடியாக நீக்குவதாக அறிவித்தது.

தலைநகரில் இப்படி அதிரடியாக திருப்பங்கள் அணிவகுத்த நிலையில், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அதிரடியாக ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

அவர்களில், இமாரதிதேவி, துளசி சிலாவத், கோவிந்த் சிங் ராஜ்புத், மகேந்திரசிங் சிசோடியா, பிரடியூம் சிங்தோமர், பிரபுராம் சவுத்ரி ஆகிய 6 மந்திரிகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 6 பேரையும் மந்திரி பதவியில் இருந்து நீக்குமாறு கவர்னர் லால்ஜி தாண்டனுக்கு முதல்-மந்திரி கமல்நாத் கடிதம் எழுதினார்.

இந்த பரபரப்புகளுக்கு மத்தியில், பெங்களூருவில் முகாமிட்டுள்ள 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள், சட்டசபை சபாநாயகர் பிரஜாபதியிடம், பாரதீய ஜனதா மூத்த தலைவர்களால் ஒப்படைக்கப்பட்டன. அவற்றின் மீது சட்டவிதிகளின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் பிரஜாபதி, நிருபர்களிடம் தெரிவித்தார்.

மத்திய பிரதேச மாநில சட்டசபையில் மொத்த இடங்கள் 230 ஆகும். 2 இடங்கள் காலியாக இருந்தன.

காங்கிரஸ் கட்சிக்கு 114 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். இப்போது 22 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், அந்த கட்சியின் பலம் 92 ஆக குறையும். அந்த அணியின் பலம் 121-ல் இருந்து 99 ஆகி விடும். எனவே காங்கிரஸ் அரசு, மெஜாரிட்டியை இழந்து மைனாரிட்டி அரசாகி உள்ளது.

இதே போன்று 22 எம்.எல்.ஏ.க்கள் விலகலால் சட்டசபையின் இடங்களும் 228-ல் இருந்து 206 ஆக குறையும். இதனால் மெஜாரிட்டிக்கு 104 இடங்கள் போதும்.

பாரதீய ஜனதா கட்சிக்கு தற்போது 107 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக இருந்து வந்த சமாஜ்வாடி கட்சியின் ஒரு எம்.எல்.ஏ.வும், பகுஜன் சமாஜ் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களும், பாரதீய ஜனதா கட்சியை தொடர்பு கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

கவர்னர் லால்ஜி தாண்டனை பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் சந்தித்து, கமல்நாத் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதை எடுத்துக் கூறி, அவர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட கோருவார் கள் என்று அரசியல் நோக்கர் கள் கருதுகின்றனர். அப்படி நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், கமல்நாத் அரசு கவிழும் ஆபத்து உருவாகி உள்ளது.

அதன் பின்னர் அந்த மாநிலத்தில் மீண்டும் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

காங்கிரசில் இருந்து விலகியுள்ள நிலையில், பாரதீய ஜனதா கட்சியில் சேரும் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக்கப்பட்டு, மத்திய மந்திரி பதவி வழங்கப்படும் என டெல்லி தகவல்கள் கூறுகின்றன.


Next Story