7 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் ரத்து: நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது


7 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் ரத்து: நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
x
தினத்தந்தி 12 March 2020 4:15 AM IST (Updated: 12 March 2020 1:56 AM IST)
t-max-icont-min-icon

எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தலை தொடர்ந்து, 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் மீதான இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 5-ந் தேதி காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் மேசையில் இருந்த சில காகிதங்களை கிழித்து வீசினர்.

இதுதொடர்பாக 7 காங்கிரஸ் எம்.பி.க்கள், நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், கவுரவ் கோகாய், டி.என்.பிரதாபன், டீன் குரியகோஸ், ஆர்.உன்னிதன், பென்னி பெஹனன், குர்ஜீத் சிங் அஜ்லா ஆகிய 7 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று மக்களவை வழக்கம்போல் காலை 11 மணிக்கு கூடியது. சபாநாயகர் இருக்கையில் இருந்த கிரித்தி சோலங்கி, கேள்வி நேரத்தை தொடங்கினார். உடனே, காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலர் சபையின் மையப்பகுதிக்கு ஓடினர்.

7 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யுமாறு கோஷமிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக தி.மு.க., இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்களும் குரல் கொடுத்தனர். அவர்களின் கோஷம் நீடித்ததால், பகல் 12.30 மணி வரை சபையை கிரித்தி சோலங்கி ஒத்திவைத்தார்.

12.30 மணிக்கு சபை மீண்டும் கூடியபோது, காங்கிரஸ் எம்.பி.க்கள் அதே கோரிக்கையை எழுப்பி சபையின் மையப்பகுதியில் கோஷமிட்டனர். அப்போது, சபாநாயகர் இருக்கையில் இருந்த ராஜேந்திர அகர்வால், பிற்பகல் 1.30 மணி வரை சபையை ஒத்திவைத்தார்.

1.30 மணிக்கு சபை கூடியபோது, காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யுமாறு பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் வலியுறுத்தினர். காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இடைநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் சபைக்கு அழைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பாலு, இடைநீக்கத்தை ரத்து செய்வதை தாமதிக்கக்கூடாது என்று கூறினார். திரிணாமுல் காங்கிரஸ், பிஜு ஜனதாதளம், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் இதே கோரிக்கையை விடுத்தனர்.

இதையடுத்து, 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கத்தை உடனடியாக ரத்து செய்வதற்கான தீர்மானத்தை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால், சபையில் தாக்கல் செய்தார். அப்போது, இடைநீக்கத்தை ரத்து செய்ய சபை உறுதி மேற்கொள்கிறது என்று அவர் கூறினார்.

இந்த தீர்மானம், குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது. இடைநீக்கம் ரத்து நடவடிக்கை, உடனடியாக அமலுக்கு வருவதாக சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார்.

அப்போது அவர் கூறுகையில், “சபையில் நடந்த நிகழ்வுகளால் நான் தனிப்பட்ட முறையில் வேதனை அடைந்துள்ளேன். மாற்று கருத்துகள், ஜனநாயகத்துக்கு அவசியம். அதே சமயத்தில் சபையின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்” என்றார்.

மாநிலங்களவை நேற்று கூடியவுடன், இடதுசாரி கட்சி உறுப்பினர்கள், சமீபத்தில் 2 மலையாள சேனல்களுக்கு 48 மணி நேர தடை விதிக்கப்பட்ட பிரச்சினையை எழுப்பினர். காங்கிரஸ் உறுப்பினர்கள், மத்தியபிரதேச அரசியல் நெருக்கடி பிரச்சினையை கிளப்பினர். டெல்லி கலவர விவகாரத்தை திரிணாமுல் காங்கிரஸ் எழுப்பியது.

அப்போது, சபைத்தலைவர் வெங்கையா நாயுடு, டெல்லி கலவரம் தொடர்பாக எதிர்க் கட்சி தலைவர் உள்ளிட்டோர் கொடுத்த நோட்டீஸ் மீது 12-ந் தேதி (இன்று) விவாதம் நடத்தப்படும் என்று கூறினார்.

ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதை ஏற்காமல், இப்போதே விவாதிக்குமாறு கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். இதனால் சபை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

2 மணிக்கு சபை மீண்டும் கூடியபோது, வருமான வரி வழக்குகளை சந்திப்பவர்களுக்கு தீர்வு அளிப்பதற்கான மசோதாவை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி ஆகியோர் வலியுறுத்தினர்.

ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், 12-ந் தேதி எடுத்துக்கொள்ளுமாறு கூறி கோஷமிட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாததால், பிற்பகல் 3.10 மணி வரை சபை ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர், சபை மீண்டும் கூடியபோது, நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி ஒரு அறிக்கையை வாசித்தார். அதில், “சபை துணைத்தலைவர் அறையில் எடுத்த முடிவின்படி, 12-ந் தேதி காலை 11 மணிக்கு 2 அவசர சட்டங்கள் மீது விவாதம் நடத்தப்படும். அதன்பிறகு, டெல்லி கலவரம் குறித்து விவாதம் நடத்தப்படும்” என்று கூறப்பட்டு இருந்தது.

அதை எதிர்க்கட்சிகளும் ஏற்றுக்கொண்டன. பிறகு சபை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.


Next Story