ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு பா.ஜனதாவில் மரியாதை கிடைக்காது- ராகுல் காந்தி
ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு பா.ஜனதாவில் மரியாதை கிடைக்காது; அவர் திருப்தி அடைய மாட்டார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
புதுடெல்லி
மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய தலைவராக விளங்கிய ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கட்சி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாகக் காங்கிரசில் இருந்து விலகினார். நேற்று பாரதீய ஜனதாவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
பாரதீய ஜனதா கட்சியில் இணைந்துள்ள ஜோதிர் ஆதித்ய சிந்தியாவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறது. மத்திய அமைச்சரவையிலும் அவருக்கு இடம் கிடைக்கும் என்று பரவலாகப் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
இந்த நிலையில், தொடர்ந்து டெல்லியில் முகாமிட்டுள்ள ஜோதிர் ஆதித்ய சிந்தியா, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாகச் சந்தித்ததாகவும், சந்திப்பின் போது பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்ததாகவும் கூறினார்.
இந்த நிலையில் ஜோதிர் ஆதித்ய சிந்தியா குறித்து ராகுல் காந்தி கூறியதாவது:-
நான் காங்கிரஸ் தலைவர் அல்ல, ஆர்.எஸ்.எஸ் பரிந்துரைக்கப்பட்டவர்கள் குறித்து நான் முடிவுகளை எடுக்கவில்லை. நாட்டின் இளைஞர்களுக்கு பொருளாதாரம் குறித்து அறிவித்து வருகிறேன். எனது அணியில் இல்லாதவர்கள் எந்த விளைவையும் ஏற்படுத்த முடியாது.
யதார்த்தம் என்னவென்றால், ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு அங்கு மரியாதை கிடைக்காது (பாஜக) அவர் திருப்தி அடைய மாட்டார். அவர் இதை உணர்ந்து கொள்வார், ஏனென்றால் நான் அவருடன் நீண்ட காலமாக நட்புடன் இருந்து உள்ளேன். அவர் இதயத்தில் இருப்பதும் அவன் வாயிலிருந்து வெளிவருவதும் வேறு.
ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் சித்தாந்தம் எனக்குத் தெரியும், அவர் என்னுடன் கல்லூரியில் படித்தார். எனக்கு அவரை நன்றாகத் தெரியும். அவர் தனது அரசியல் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டு, தனது சித்தாந்தத்தை கைவிட்டு, ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தில் இணைந்து உள்ளார். இது சித்தாந்தத்தின் சண்டை, ஒருபுறம் காங்கிரஸ் மறுபுறம் பாஜக-ஆர்.எஸ்.எஸ் என கூறினார்.
Related Tags :
Next Story