கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் பிரதமர் மோடி வேண்டுகோள்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறித்து அரசு கண்காணிப்புடன் உள்ளது. மக்கள் பீதியடைய வேண்டாம் என்று பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தாக்குதல் உலகம் முழுவதும் பரவி உள்ளது. இந்தியாவில் 73 பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது. மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் மூலம் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பீதி வேண்டாம்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து அரசு முழு கண்காணிப்புடன் இருக்கிறது. இந்தியாவில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக அனைத்து மாநிலங்களிலும், அனைத்து அமைச்சகங்களிலும் பல தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விசாக்களை தற்காலிகமாக ரத்து செய்வதில் இருந்து சுகாதார பணிகளை அதிகரிப்பது வரை பல நடவடிக்கைகள் இதில் அடங்கியுள்ளன. எனவே மக்கள் பீதியடைய தேவையில்லை, முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் போதும்.
பயணம் தவிர்ப்போம்
அடுத்த சில நாட்களுக்கு மத்திய அரசின் எந்த மந்திரியும் வெளிநாடு பயணம் செய்யமாட்டார்கள். நமது நாட்டு மக்களும் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்யவும், வைரஸ் பரவுவதை தடுக்கவும் பெரிய அளவில் கூடுவதை தவிர்ப்போம்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உரிய முறையில் பரிசோதனை
மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன் கூறியதாவது:-
30 விமான நிலையங்களில் அனைத்து விமான பயணிகளும் உரிய முறையில் பரிசோதிக்கப்படுகிறார்கள். இதில் எந்த சந்தேகமும் இல்லை. தற்போது 51 ஆய்வகங்களும், 56 ரத்த சேகரிப்பு மையங்களும் பரிசோதனை பணியில் ஈடுபட்டுள்ளன.
ஈரானுக்கு விஞ்ஞானிகள் குழுவுடன் ஆய்வக கருவிகளும் அனுப்பப்பட்டுள்ளது. எனவே அங்கு ஒரு ஆய்வகம் இந்தியா சார்பில் அமைக்கப்படும். வெளிநாடுகளில் உள்ள அனைத்து இந்தியர்களையும் பாதுகாப்பாக அழைத்து வருவது அரசின் பொறுப்பு. எம்.பி.க்கள் தங்கள் தொகுதியில் உள்ள மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு ஹர்ஷவர்தன் கூறினார்.
10½ லட்சம் பேர்
சுகாதார அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, “இந்தியாவில் 73 நோயாளிகளுடன் தொடர்பில் உள்ள 1,500 பேர் கண்காணிப்பில் உள்ளனர். விமான நிலையங்களில் இதுவரை 10½ லட்சம் பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அதிக வெயிலில் இந்த வைரஸ் அழிந்துவிடும் என்பதற்கு ஆதாரம் இல்லை. உலக சுகாதார நிறுவனத்திற்கு உடன்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது” என்றனர்.
Related Tags :
Next Story