வெளிநாடுகளில் இருந்து வந்த 12 லட்சம் விமான பயணிகளுக்கு மருத்துவ சோதனை - மத்திய மந்திரி தகவல்


வெளிநாடுகளில் இருந்து வந்த 12 லட்சம் விமான பயணிகளுக்கு மருத்துவ சோதனை - மத்திய மந்திரி தகவல்
x
தினத்தந்தி 14 March 2020 7:31 PM GMT (Updated: 14 March 2020 7:31 PM GMT)

வெளிநாடுகளில் இருந்து வந்த 12 லட்சம் விமான பயணிகளுக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பேகம்பெட் விமான நிலையத்தில் நடைபெற்றுவரும் சர்வதேச விமான கண்காட்சி நிகழ்ச்சியில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப்சிங் புரி பேசியதாவது:-

கொரோனா வைரசால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சீனா, ஈரான், இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்துவரும் பணியில் ஏர் இந்தியா ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் முதல் நோயாளி உறுதியானதும் விமான நிலையங்களில் சோதனை நடத்துவது தொடங்கப்பட்டது.

நாட்டில் உள்ள 30 விமான நிலையங்களில் இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்த 10,876 விமானங்களில் பயணம் செய்த 11.71 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இவர்களில் 3,225 பேருக்கு அறிகுறிகள் இருந்ததால் ரத்த பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். இந்த வைரஸ் தாக்குதலால் உள்நாட்டு விமான போக்குவரத்து 15 முதல் 20 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story