காஷ்மீரில் அரசியல் கைதிகள் அனைவரும் விரைவில் விடுதலை: உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி


காஷ்மீரில் அரசியல் கைதிகள் அனைவரும் விரைவில் விடுதலை: உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி
x
தினத்தந்தி 15 March 2020 10:45 PM GMT (Updated: 15 March 2020 9:55 PM GMT)

காஷ்மீரில் அனைத்து அரசியல் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.

புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி அதிரடி நடவடிக்கை எடுத்தது.

அதைத் தொடர்ந்து அங்கு விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்காதபடிக்கு தடுக்கிற வகையில், அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரிகள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் உடனடியாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.

பரூக் அப்துல்லா மீது பொது பாதுகாப்பு சட்டமும் பாய்ந்தது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் நீண்ட கால கோரிக்கைக்கு பின்னர் அவர் கடந்த 13-ந் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து அவர் நேற்று விடுத்த அறிக்கையில், காஷ்மீர் யூனியன் பிரதேச எல்லைக்கு அப்பால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரையும் மனிதாபிமான அடிப்படையில் மத்திய அரசு விடுதலை செய்ய வேண்டும். மற்றவர்களும் இந்தக் கோரிக்கையை என்னுடன் சேர்ந்து அரசுக்கு வைப்பார்கள் என்று நம்புகிறேன் என கூறினார்.

இதற்கிடையே மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை டெல்லியில், அல்தாப் புகாரி தலைமையிலான ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி தூதுக்குழுவினர் நேற்று சந்தித்து பேசினார்கள். அவர்கள் 40-க்கும் மேற்பட்ட பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்தார்கள்.

அப்போது அவர்களிடம் உள்துறை மந்திரி அமித்ஷா அளித்த வாக்குறுதிகள் வருமாறு:-

* காஷ்மீருக்கு விரைவில் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

* காஷ்மீருக்கு மற்ற மாநிலங்களை விட சிறப்பான குடியேற்ற கொள்கை வகுக்கப்படும்.

* காஷ்மீரில் மத்திய சட்டங்களை அமல்படுத்துவதில் பாரபட்சம் இருக்காது. அனைத்து பிரிவினரின் நலன்களும் கருத்தில் கொள்ளப்படும்.

அரசியல் கைதிகள் விடுதலை

* அனைத்து அரசியல் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்.

* காஷ்மீரின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகள், தனிநபர்களிடம் ஆலோசனைகள் கேட்கப்படும்.

* இட ஒதுக்கீடு தொடர்பாக விரைவில் ஒரு கமிஷன் அமைக்கப்படும்.

* மக்களின் குறைகளை வாரம் 2 முறை கேட்டறிந்து, தீர்வு காண்பதற்காக மூத்த மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு கவர்னரிடம் கூறப்படும்.

சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்கு பின்னர் தூதுக்குழுவின் தலைவர் அல்தாப் புகாரி கூறும்போது, “காஷ்மீரில் மக்கள் தொகை மாற்றம் குறித்த அச்சங்களை உள்துறை மந்திரி நீக்கி விட்டார். மாநில அந்தஸ்து மீண்டும் மீட்டெடுக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்” என குறிப்பிட்டார்.


Next Story