ஈரான், இத்தாலியில் இருந்து 454 பேர் அழைத்து வரப்பட்டனர்


ஈரான், இத்தாலியில் இருந்து 454 பேர் அழைத்து வரப்பட்டனர்
x
தினத்தந்தி 15 March 2020 10:15 PM GMT (Updated: 15 March 2020 10:15 PM GMT)

கொரோனா வைரஸ் பீதி காரணமாக, ஈரான், இத்தாலியில் இருந்து 454 இந்தியர்கள் விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்தது.

ஜெய்சல்மார்,

ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு 6 ஆயிரம் இந்தியர்கள் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை தாயகம் அழைத்துவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, கடந்த 10-ந் தேதி, ஈரானில் இருந்து 58 இந்தியர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். கடந்த 13-ந் தேதி, மேலும் 44 பேர் அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில், மூன்றாவது கட்டமாக, நேற்று ஈரானில் இருந்து 236 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களை ஏற்றிக்கொண்டு, 2 ஏர் இந்தியா விமானங்கள், நேற்று காலை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாருக்கு வந்து சேர்ந்தன.

அவர்களில் 131 பேர் மாணவர்கள். மற்றவர்கள் யாத்ரீகர்கள் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தகவல் வெளியிட்டார். இதற்காக ஈரானில் உள்ள இந்திய தூதர் தாமு கட்டமுக்கும், ஈரான் அதிகாரிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

வந்தவர்களில் 100 பேர் ஆண்கள், 136 பேர் பெண்கள் ஆவர். 236 பேரும் ஜெய்சல்மாரில் ராணுவம் அமைத்துள்ள ராணுவ நல்வாழ்வு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். இன்னும் 14 நாட்களுக்கு அவர்கள் அங்கு மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்கள் என்று பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் சாம்பிட் கோஷ் தெரிவித்தார்.

இதுபோல் இத்தாலியின் மிலன் நகரில் இருந்து நேற்று 218 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் டெல்லியில் சாவ்லா பகுதியில் உள்ள இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படை முகாமில் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவர்.

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை கொரோனா வைரசில் இருந்து பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக, வெளியுறவுத்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் டம்மு ரவி தலைமையில் சிறப்பு பிரிவை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. இக்குழு, இந்திய தூதரகங்களுடன் இணைந்து செயல்படுகிறது.

கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு செல்ல ஒரு எமிரேட்ஸ் விமானம் தயார்நிலையில் இருந்தது. அதில் 289 பயணிகள் இருந்தனர். அவர்களில் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பயணிக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது பரிசோதனையில் உறுதி ஆனது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமானத்தில் இருந்த 289 பயணிகளும் கீழே இறக்கப்பட்டனர். பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொரோனா உறுதி செய்யப்பட்ட பயணி, 19 பேர் கொண்ட குழுவுடன் மூணாறுக்கு சுற்றுலா வந்திருந்தார். அங்கு அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால், பரிசோதனை நடந்தது. அதன் முடிவுகள் வரும்வரை வெளியே செல்லக்கூடாது என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

ஆனால், அதை மீறி அவர் கொச்சி விமான நிலையத்துக்கு சென்று விமானத்தில் ஏறி அமர்ந்து விட்டார். அதன்பிறகுதான், பரிசோதனைகள் முடிவுகள் தெரிய வந்ததால், அவர் உள்பட அனைவரும் கீழே இறக்கப்பட்டனர். பின்னர், அந்த பயணி உள்ளிட்ட 20 பேரை தவிர, மற்றவர்கள் விமானத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். நோய் உறுதி செய்யப்பட்ட பயணி, தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மராட்டிய மாநிலத்தில் நேற்று மேலும் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது. இதன்மூலம், கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில், கேரளாவை (22 பேர்) மராட்டியம் முந்தியது.

டெல்லியில் 7 பேரும், உத்தரபிரதேசத்தில் 11 பேரும், கர்நாடகாவில் 6 பேரும், லடாக், தெலுங்கானாவில் தலா 3 பேரும், காஷ்மீர், ராஜஸ்தானில் தலா 2 பேரும், தமிழ்நாடு, ஆந்திரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள் ஆகியவற்றை 31-ந் தேதிவரை மூடுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், மருத்துவ கல்லூரிகள் இயங்கும். மாநில மந்திரிசபை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

கர்நாடக மாநிலத்தில், 7-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்புவரை ஆண்டு இறுதி தேர்வு 31-ந் தேதிவரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் கல்வி நிறுவனங்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், சினிமா தியேட்டர்கள் ஆகியவை 29-ந் தேதிவரை மூடப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சாகிப் குருத்வாராவுக்கு செல்ல பஞ்சாப் மாநிலத்தில் இருந்து புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்த பாதையில் யாத்திரை செல்வது நிறுத்தி வைக்கப்பட்டது. நேற்று நள்ளிரவு 12 மணியில் இருந்து இது அமலுக்கு வந்தது. மறு உத்தரவு வரும்வரை இந்த தடை நீடிக்கும்.

மிசோரம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு கூட உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், நோய் அறிகுறிகளுடன் 117 பேர் தனிமைப்படுத்தி, கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்திப்பட சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், ஞாயிற்றுக்கிழமை தோறும் தன் ரசிகர்களை சந்திப்பது வழக்கம். ஆனால், கொரோனா பீதி காரணமாக, அவர் நேற்று இச்சந்திப்பை ரத்து செய்தார். அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 17 பேர் வெளிநாட்டினர் ஆவர். கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story