தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு தப்புமா? - சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு + "||" + Will Congress Congress escape in Madhya Pradesh? - A vote of confidence in the Assembly today

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு தப்புமா? - சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு தப்புமா? - சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
மத்திய பிரதேசத்தில் முதல்-மந்திரி கமல்நாத் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். எனவே அவரது தலைமையிலான காங்கிரஸ் அரசு தப்புமா? என்பது இன்று தெரிந்துவிடும்.22 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா
போபால்,

மத்திய பிரதேச மாநில அரசியலில் ஏற்பட்டு வந்த பரபரப்பு இன்று (திங்கட்கிழமை) உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.

முதல்-மந்திரி கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிற அந்த மாநிலத்தில், அந்த கட்சியின் மூத்த தலைவராக இருந்து வந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா கடந்த 10-ந் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். அவர் பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அந்தக் கட்சியில் சேர்ந்து, மாநிலங்களவை தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


அவரது ஆதரவாளர்களாக இருந்து வந்த 6 மந்திரிகள் உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இது தொடர்பாக அவர்கள் கவர்னருக்கும், சபாநாயகருக்கும் கடிதங்கள் அனுப்பி வந்தனர்.

230 இடங்களை கொண்ட மாநில சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 114 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். சமாஜ்வாடி கட்சியின் ஒரு எம்.எல்.ஏ., பகுஜன் சமாஜ் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்கள், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் என 121 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் அந்தக் கட்சி ஆட்சி அமைத்திருந்தது.

22 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவைத் தொடர்ந்து அங்கு காங்கிரஸ் அரசு, சிறுபான்மை அரசாக மாறியது. காங்கிரஸ் அரசு, சட்டசபையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் சூழல் உருவானது.

குதிரைப்பேரம் நடைபெறாமல் தடுக்கிற வகையில் ஆளும் காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சியும் அதிரடி நடவடிக்கையில் இறங்கின.

பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 10-ந் தேதி இரவோடு இரவாக அந்தக் கட்சி ஆட்சி செய்யும் அரியானா மாநிலம் குருகிராமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதேபோன்று காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 92 பேரும், காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளித்து வரும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும், அந்தக் கட்சி ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு 11-ந் தேதி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில், கவர்னர் லால்ஜி தாண்டனை முதல்-மந்திரி கமல்நாத் 13-ந் தேதி சந்தித்து பேசினார்.

அதைத் தொடர்ந்து முதல்-மந்திரி கமல்நாத், 16-ந் தேதி (இன்று) சட்டசபையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் லால்ஜி தாண்டன் உத்தரவிட்டார். இதையொட்டி நேற்று முன்தினம் இரவு அவர் முதல்-மந்திரி கமல்நாத்துக்கு கடிதம் எழுதினார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:-

* மாநில அரசு நம்பிக்கையை இழந்து விட்டது, சிறுபான்மை அரசாகி விட்டது என்பதற்கு அடிப்படை ஆதாரங்கள் உள்ளன.

* மத்திய பிரதேச மாநில சட்டசபை 16-ந் தேதி (இன்று) காலை 11 மணிக்கு கூட்டப்பட வேண்டும். சட்டசபையில் கவர்னர் உரையை அடுத்து அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். கவர்னர் உரைக்கு பின்னர் இந்த ஒரு அலுவல்தான் சபையில் நடைபெற வேண்டும்.

* ஓட்டெடுப்பை டிவிசன் முறையில் (எண்ணி கணக்கிடும் முறை) நடத்த வேண்டும். இந்த ஓட்டெடுப்பை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்.

* நம்பிக்கை வாக்கெடுப்பு நடைமுறைகள் யாவும் 16-ந் தேதி முடிந்து விட வேண்டும், எந்த சூழ்நிலையிலும் இதை ஒத்தி போடவோ, தாமதிக்கவோ, நிறுத்தி வைக்கவோ கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு மத்தியில் இமாரதிதேவி, துளசி சிலாவத், கோவிந்த் சிங் ராஜ்புத், மகேந்திரசிங் சிசோடியா, பிரடியூம் சிங்தோமர், பிரபுராம் சவுத்ரி ஆகிய 6 மந்திரிகளின் ராஜினாமாக்களை சட்டசபை சபாநாயகர் பிரஜாபதி ஏற்றுக்கொண்டு விட்டார்.

அதே நேரத்தில் பெங்களூருவில் முகாமிட்டுள்ள 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா மீது அவர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதன் காரணமாக அவர்கள் இன்னும் எம்.எல்.ஏ.க்களாகவே தொடர்கிறார்கள்.

சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக ஜெய்ப்பூர் சென்றிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று போபாலுக்கு விமானம் மூலம் திரும்பினர். அவர்கள் தத்தமது வீடுகளுக்கு செல்லாமல் போபாலிலேயே தங்கியுள்ளனர்.

இதே போன்று அரியானா மாநிலம், குருகிராமில் முகாமிட்டிருந்த பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்களும் போபாலுக்கு திரும்பினர். அவர்களுக்கு சட்டசபை பாரதீய ஜனதா தலைமை கொறடா நரோத்தம் மிஷ்ரா, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அனைவரும் தவறாமல் சபைக்கு வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆளும் காங்கிரஸ் கட்சியும் தனது எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கண்டிப்பாக சபையில் ஆஜராகி இருக்க வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திப்பது குறித்து முதல்-மந்திரி கமல்நாத் மாநில மந்திரிசபையை கூட்டி அவசர ஆலோசனை நடத்தினார்.

மத்திய பிரதேச மாநில சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு கூடுகிறது. முதலில் கவர்னர் லால்ஜி தாண்டன் உரை நிகழ்த்துவார்.

அதைத் தொடர்ந்து முதல்-மந்திரி கமல்நாத், தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்வார். அதன்மீது விவாதம் நடத்தப்படும். விவாதத்துக்கு முதல்-மந்திரி கமல்நாத் பதில் அளித்ததும் ஓட்டெடுப்பு நடைபெறும்.

இந்த ஓட்டெடுப்பில் கமல்நாத் அரசு பிழைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மத்திய பிரதேச மாநில சட்டசபையில் மொத்த இடங்கள் 230 ஆகும். 2 இடங்கள் காலியாக உள்ளன. 6 மந்திரிகள் ராஜினாமா ஏற்கப்பட்டு விட்டதால் சபையின் மொத்த பலம் 222 ஆக குறைந்துள்ளது.

இதில் பெரும்பான்மைக்கு 112 இடங்கள் தேவைப்படுகிறது.

6 மந்திரிகள் ராஜினாமாவை தொடர்ந்து காங்கிரசின் பலம் 114-ல் இருந்து 108 ஆக குறைந்துள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து மாநில மக்கள் தொடர்பு மந்திரி பி.சி.சர்மா நேற்று கூறுகையில், “சட்டசபையில் நாங்கள் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. தனது உரைக்கு பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கவர்னர் கூறி இருந்தாலும்கூட, சபையின் நடவடிக்கைகளை தீர்மானிக்க வேண்டியது சபாநாயகர்தான். அவர் இதில் முடிவு எடுப்பார்” என தெரிவித்தார்.

அதே நேரத்தில் பாரதீய ஜனதா தலைமை கொறடா நரோத்தம் மிஷ்ரா கருத்து தெரிவிக்கையில், “காங்கிரஸ் அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டது. இந்த அரசு சிறுபான்மை அரசாகி விட்டது என்று கவர்னர் தெரிவித்துள்ளார். முதல்-மந்திரிக்கு கவர்னர் எழுதிய கடிதத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது” என கூறினார்.

காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேரின் ராஜினாமா குறித்து சபாநாயகர் முடிவு எடுக்காத நிலையில், இன்று என்ன நடக்கும் என்று எளிதில் கணித்து விட முடியாத சூழல் உள்ளது. கமல்நாத் அரசு பிழைக்குமா அல்லது கவிழுமா என்பது ஓட்டெடுப்புக்கு பின்னர்தான் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. மத்திய பிரதேசம்; நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவராஜ் சிங் சவுகான் வெற்றி
மத்திய பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகான் வெற்றி பெற்றார்.
2. மத்திய பிரதேச முதல் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கமல்நாத் அறிவிப்பு
மத்திய பிரதேச முதல் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கமல்நாத் அறிவித்துள்ளார்.
3. மத்தியபிரதேச சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய பிரதேச சட்ட சபையில் இன்று மாலை 5.30 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
4. மத்தியப் பிரதேசத்தில் அரசியல் நெருக்கடி; 92 எம்.எல்.ஏக்களை ராஜஸ்தான் அழைத்துச்சென்றது காங்கிரஸ்
ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 22 பேர் ராஜினாமாவால் மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
5. ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்கிறார்கள்: பாஜக மீது ம.பி முதல்வர் கமல்நாத் பாய்ச்சல்
மாஃபியாக்கள் ஆதரவுடன் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.