மத்திய பிரதேசத்தில் வரும் 26 ஆம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை?


மத்திய பிரதேசத்தில் வரும் 26 ஆம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை?
x
தினத்தந்தி 16 March 2020 6:27 AM GMT (Updated: 16 March 2020 6:41 AM GMT)

மத்திய பிரதேசத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னர் உத்தரவிட்டு இருந்த நிலையில், அவை 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

போபால், 

மத்தியப்பிரதேச காங்கிரசின் முக்கிய தலைவராக இருந்த ஜோதிர்ஆதித்யசிந்தியா, சமீபத்தில் பாஜகவில்  இணைந்தார். இதனால், ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 22 பேரும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக கவர்னருக்கும் சபாநாயகருக்கும் கடிதம் அனுப்பியதோடு  பெங்களூருவில் முகாமிட்டனர்.  இவர்களில் 6 மந்திரிகளின் ராஜினாமா கடிதத்தை  மட்டும் ஏற்றுக்கொண்ட சபாநாயகர், ஏனைய 16 எம்.எல்.ஏக்களின் ராஜினாமா குறித்து முடிவு எதுவும் எடுக்கவில்லை. 

இத்தகைய காரணங்களால், மத்தியப் பிரதேசத்தில் ஆளும் கமல்நாத் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கும் சூழலில், இன்று  பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கமல்நாத்திற்கு மத்திய பிரதேச ஆளுநர் உத்தரவிட்டார். ஆனால், இன்று மத்திய பிரதேச சட்டப்பேரவையில் கவர்னர் உரை முடிந்ததும், சட்டப்பேரவை வரும் 26 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதனால், அன்றைய தினம் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாது எனத்தெரிகிறது.  முன்னதாக, சட்டப்பேரவையில் உரை நிகழ்த்தாமல் வெளிநடப்பு செய்த   கவர்னர் லால்ஜி தண்டன்,  அரசியலமைப்பு சாசனப்படி அனைத்து விவகாரங்களும் பின்பற்றப்பட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே மாநிலத்தின் கண்ணியம் காக்கப்படும்” எனக் கூறியிருந்தார். 

ஏற்கனவே, அவையின் நடவடிக்கைகள் தொடர்பாக சபாநாயகருக்கு கவர்னர் உத்தரவிட முடியாது என்று முதல் மந்திரி கவர்னருக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story