தேசிய செய்திகள்

மத்தியபிரதேச சட்டசபை திடீர் ஒத்திவைப்பு: இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் முதல்-மந்திரி கமல்நாத்துக்கு கவர்னர் மீண்டும் உத்தரவு + "||" + Madhya Pradesh Assembly Sudden Postponement: Will hold a vote of confidence today

மத்தியபிரதேச சட்டசபை திடீர் ஒத்திவைப்பு: இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் முதல்-மந்திரி கமல்நாத்துக்கு கவர்னர் மீண்டும் உத்தரவு

மத்தியபிரதேச சட்டசபை திடீர் ஒத்திவைப்பு:  இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்  முதல்-மந்திரி கமல்நாத்துக்கு கவர்னர் மீண்டும் உத்தரவு
22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவால், மத்தியபிரதேசத்தில் கமல்நாத் அரசு பெரும்பான்மை இழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இதையடுத்து, இன்று வாக்கெடுப்பு நடத்துமாறு முதல்-மந்திரிக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
போபால், 

மத்தியபிரதேசத்தில், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. 230 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில், காங்கிரஸ் கட்சிக்கு 114 எம்.எல்.ஏ.க்கள்தான் உள்ளனர். சுயேச்சைகள் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சி நடந்து வருகிறது.

இதற்கிடையே, காங்கிரசில் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு ஆதரவான 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் என்.பி.பிரஜாபதியிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். அவர்களில் 6 பேரின் ராஜினாமாவை மட்டும் சபாநாயகர் ஏற்றுக் கொண்டுள்ளார். 2 காலியிடங்கள் உள்ளன.

எனவே, சட்டசபையில் தற்போது 222 உறுப்பினர்கள்தான் உள்ளனர். பெரும்பான்மைக்கு 112 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. காங்கிரசுக்கு 108 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜனதாவுக்கு 107 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

கமல்நாத் அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக பா.ஜனதா தரப்பு, கவர்னர் லால்ஜி தாண்டனிடம் முறையிட்டது. அதையடுத்து, சட்டசபையில் 16-ந் தேதி (நேற்று) கவர்னர் உரைக்கு பிறகு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு முதல்-மந்திரி கமல்நாத்துக்கு கடந்த 14-ந் தேதி கவர்னர் கடிதம் எழுதினார்.

மீண்டும் உத்தரவு

ஆனால், நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமலேயே சட்டசபை கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, இன்று (செவ்வாய்க்கிழமை) சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு முதல்-மந்திரி கமல்நாத்தை கவர்னர் லால்ஜி தாண்டன் மீண்டும் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, மத்தியபிரதேச சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர், நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. சம்பிரதாய நிகழ்வாக, கவர்னர் லால்ஜி தாண்டன் உரையாற்றினார்.

அவர் முழு உரையையும் வாசிக்காமல், இரண்டே நிமிடங்களில் உரையை நிறுத்திக் கொண்டார். சபாநாயகர் பிரஜாபதியுடன் வெளியேறினார்.

தள்ளிவைப்பு

பின்னர், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு கோஷமிட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோஷமிட்டனர்.

அமளிக்கிடையே, சட்ட சபையை 26-ந் தேதிவரை தள்ளி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். அன்றுதான் மாநிலங்களவை தேர்தல் ஓட்டெடுப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

பின்னர், முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கவர்னர் மாளிகைக்கு சென்றனர். உடனே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டனர். காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கும் கவர்னரை சந்தித்தார்.

முதல்-மந்திரி கமல்நாத், கவர்னர் லால்ஜி தாண்டனுக்கு நேற்று ஒரு கடிதம் எழுதினார். அதில், “காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர், கர்நாடக போலீஸ் கட்டுப்பாட்டில் பா.ஜனதாவின் பிடியில் இருக்கிறார்கள். எனவே, இத்தகைய சூழ்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இயலாது. அப்படி நடத்துவது ஜனநாயக விரோதமானது” என்று கமல்நாத் கூறியுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

இதற்கிடையே, சிவராஜ்சிங் சவுகான் உள்பட 10 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், சட்டசபையில் 12 மணி நேரத்துக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு கமல்நாத் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கோரி உள்ளனர்.

இந்த மனுவை அவசர மனுவாக இன்று விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புக்கொண்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவு பிறப்பிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த பின்னணியில்தான், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு கவர்னர் கூறியுள்ளார்.