‘பான்’ எண்ணுடன் ஆதார் இணைக்க 31-ந் தேதி இறுதிக்கெடு வருமான வரித்துறை மீண்டும் அறிவிப்பு


‘பான்’ எண்ணுடன் ஆதார் இணைக்க 31-ந் தேதி இறுதிக்கெடு   வருமான வரித்துறை மீண்டும் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 March 2020 11:05 PM GMT (Updated: 16 March 2020 11:05 PM GMT)

‘பான்’ எண்ணுடன் ஆதார் இணைக்க 31-ந் தேதி கடைசி நாள் என்று வருமான வரித்துறை மீண்டும் அறிவித்துள்ளது. இந்த கடைசி வாய்ப்பை தவற விடாதீர்கள் என்றும் கூறியுள்ளது.

புதுடெல்லி, 

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக, வருமான வரித்துறை சார்பில் ‘பான்’ எண் வழங்கப்படுகிறது. தனித்துவ அடையாள ஆணையம் சார்பில் ‘ஆதார்’ எண் வழங்கப்படுகிறது.

‘பான்’ எண்ணுடன் ஆதாரை இணைக்குமாறு வருமான வரித்துறை அறிவுறுத்தியது. இந்த காலக்கெடு அடிக்கடி நீட்டிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஆதார் திட்டம் அரசியல் சட்டரீதியாக செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் என்று உத்தரவிட்டது.

செயல் இழக்கும்

அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் ‘பான்’ எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவித்தது. இது, 8-வது கால நீட்டிப்பு ஆகும்.

கடந்த ஜனவரி 27-ந் தேதி நிலவரப்படி, 30 கோடியே 75 லட்சம் ‘பான்’ எண்களுடன் ஆதார் இணைக்கப்பட்டதாகவும், இன்னும் 17 கோடியே 58 லட்சம் பான் எண்களுடன் ஆதார் இணைக்கப்படவில்லை என்றும் புள்ளி விவரம் வெளியிடப்பட்டது.

கடந்த மாதம் வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பில், பான் எண்ணுடன் ஆதார் இணைக்க மார்ச் 31-ந் தேதி கடைசிநாள் என்றும், அப்படி இணைக்காவிட்டால், பான் எண் செயலிழந்து விடும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

தவற விடாதீர்கள்

இந்நிலையில், வருமான வரித்துறை நேற்று மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. தனது சமூக வலைத்தள பக்கத்தில், ஒரு வீடியோவுடன் கூடிய செய்தியை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மார்ச் 31-ந் தேதிக்குள், பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம். பயோ மெட்ரிக் ஆதார் உறுதிப்படுத்தல் மூலமும், பான் சேவை மையங்களிலும் இப்பணியை செய்யலாம். நாளைய பலன்களுக்கு இதை இணைப்பது அவசியம். எனவே, இந்த இறுதி வாய்ப்பை தவற விடாதீர்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மார்ச் 31-ந் தேதிக்குள் ஆதார் இணைக்காத பான் எண்கள் செயலிழந்து விடும். பின்னர், ஆதார் இணைக்கப்பட்ட நாளில் இருந்து அந்த எண்கள் செயல்பட தொடங்கும் என்று வருமான வரித்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது.

Next Story