கொரோனாவுக்கு எதிராக பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகளுக்கு மோடி பாராட்டு பயணங்களை தவிர்க்கவும் அறிவுரை


கொரோனாவுக்கு எதிராக பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகளுக்கு மோடி பாராட்டு   பயணங்களை தவிர்க்கவும் அறிவுரை
x
தினத்தந்தி 17 March 2020 12:00 AM GMT (Updated: 16 March 2020 11:18 PM GMT)

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக பணியாற்றிவரும் டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் எடுக்கப்பட்டுவரும் பல்வேறு நடவடிக்கைகளையும், அதற்கு பாராட்டுகளையும் பலர் டுவிட்டர் மூலம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அந்த பதிவுகளை மறுபதிவு செய்து, சில தகவல்களையும் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில், “கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மக்கள் வெளியிட்டு பாராட்டுவது ஊக்கப்படுத்துவதாக உள்ளது. இந்த பாராட்டுகள் அனைத்தும் இந்த நடவடிக்கையில் முன்னணியில் இருந்து பணியாற்றிவரும் அனைத்து டாக்டர்கள், நர்சுகள், நகராட்சி பணியாளர்கள், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் இதர குறிப்பிடத்தக்க மக்களின் மனஉறுதிக்கு கிடைத்தவை” என்று கூறியுள்ளார்.

அனைத்து முயற்சிகளும்

ஒரு நபர், தனது சந்திப்புகள், வர்த்தக பயணங்கள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டதாக கூறியிருந்தார். அதற்கு பிரதமர் மோடி, “ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கை. அத்தியாவசியமில்லாத பயணங்களை தவிர்ப்பது, குடும்பத்துடன் வெளியே செல்வதை குறைத்துக்கொள்வது ஆகியவை வரவேற்கக்கூடிய நடவடிக்கைகள்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது:-

அனைத்து மட்டங்களிலும், பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக உறுதியுடன் பணியாற்றி வருகிறார்கள். மக்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்ய அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். இந்த வைரசுக்கு எதிரான நடவடிக்கைக்கு பொறுப்புள்ள குடிமக்கள் கூடுதல் வலிமை சேர்ப்பார்கள்.

டாக்டர்களுக்கு பாராட்டு

மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்த செயலையும் நமது குடிமக்கள் செய்யமாட்டார்கள் என்பதை நான் உறுதியாக சொல்கிறேன். நமது டாக்டர்கள், நர்சுகள், சுகாதார ஊழியர்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மக்களுக்கு உதவுவதற்காக அவர்கள் வெளியில் வந்திருக்கிறார்கள். நாம் அவர்களது பங்களிப்பை பாராட்ட வேண்டும்.

ஒவ்வொருவரும் நலமாக இருக்க எங்களால் முடிந்த அளவு சிறப்பாக பணியாற்றுகிறோம். வைரஸ் தாக்குதல் அறிகுறி இருப்பவர்களுக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது அனைவரின் ஒருங்கிணைந்த நடவடிக்கை. இதுபோன்ற சூழ்நிலையில் இது இந்தியாவின் வலிமையான துணிச்சலை காட்டுகிறது.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

Next Story