குடியுரிமை திருத்த சட்டம் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்


குடியுரிமை திருத்த சட்டம் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்
x
தினத்தந்தி 17 March 2020 11:15 PM GMT (Updated: 17 March 2020 8:35 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டம் எந்தவகையிலும் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது.

புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கிய போராட்டங்கள், நாடு முழுவதும் பரவியது. டெல்லியில் கடந்த மாதம் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ், தி.மு.க., ராஷ்டிரீய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக மொத்தம் 143 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அந்த மனுக்களில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டு உள்ளது. மேலும், இந்த சட்டம் அரசியல்சாசனத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது. மதத்தின் அடிப்படையில் விலக்கு அளிப்பதன் மூலம், சட்டவிரோதமாக குடியேறியவர்களில் ஒரு பிரிவினருக்கு குடியுரிமை அளிப்பதை இந்த சட்டம் நோக்கமாக கொண்டுள்ளது என்றும் அந்த மனுக்களில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த ஜனவரி 23-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த சட்டம் அரசியல்சாசனப்படி செல்லத்தக்கதா? என்பதை பரிசீலிக்க ஒப்புக்கொண்டு சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்தனர். மனுக்கள் மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், நேற்று மத்திய அரசு தரப்பில் உள்துறை அமைச்சகத்தின் இயக்குனர் பி.சி.ஜோஷி சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்தார். 129 பக்கங்கள் கொண்ட இந்த பதில் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாது. இந்த சட்டத்தில் இந்திய அரசியல் சட்டத்துக்கு விரோதமாக எதுவும் இல்லை. குடியுரிமை தொடர்பான சட்டம் இயற்றும் விஷயத்தில் ஒரு நாட்டின் சிறுபான்மையினர் மற்றும் பெரும்பான்மை இனத்தவர் குறித்த பாகுபாடுகளை கருத்தில் கொள்வதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளது.

அண்டை நாடுகளில் மத ரீதியாக ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனத்தவர்களுக்கும் அந்த நாடுகளின் பெரும்பான்மை மதத்தவர்களுக்கும் வேறுபாடு உள்ளது. இது மத்திய அரசின் வெளியுறவு கொள்கை தொடர்பான விஷயமாகும். மத்திய அரசு சட்டரீதியாக இந்த பாகுபாட்டை கருத்தில்கொண்டு இந்த சட்டத்தை இயற்றி உள்ளது. இதில் குறுக்கிடுவதற்கு நீதித்துறைக்கு அதிகாரம் இல்லை. இதற்கு முன்பு இருந்த அரசுகள் இந்த பிரச்சினையை சட்டரீதியாக அணுக முயற்சிக்கவில்லை.

குடியுரிமை திருத்த சட்டம் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டு தவறு. மதரீதியாக ஒடுக்கப்படும் அண்டை நாடுகளின் சிறுபான்மை இனத்தவருக்கு குடியுரிமை வழங்குவது இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மைக்கு எந்தவகையிலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. யாருடைய மதரீதியான சுதந்திரத்துக்கும் இந்த சட்டம் எதிரானது அல்ல.

உலகின் பல்வேறு நாடுகளில் தேசிய மக்கள் பதிவேடு நடைமுறை அமலில் உள்ளது. ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் குடிமக்கள் அடையாள அட்டைகளும் வழங்கப்படுகின்றன. எனவே, குடியுரிமை சட்டத்துக்கு எதிரான மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story