டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கு: குற்றவாளிகள் 4 பேரும் தூக்கில் போடப்பட்டனர்


டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கு: குற்றவாளிகள் 4 பேரும் தூக்கில் போடப்பட்டனர்
x
தினத்தந்தி 20 March 2020 11:15 PM GMT (Updated: 20 March 2020 9:46 PM GMT)

டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரும் டெல்லி திகார் சிறையில் தூக்கில் போடப்பட்டனர். அவர்களுடைய உடல் கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பஸ்சில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி கற்பழித்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரில் ராம்சிங் என்பவர் டெல்லி திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு நபர் சிறுவன் என்பதால் பின்னர் விடுவிக்கப்பட்டான்.

மற்ற கைதிகளான முகேஷ் சிங் (வயது 32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்‌ஷய் குமார் சிங் (31) ஆகிய 4 பேருக்கும் இந்த வழக்கை விசாரித்த டெல்லி செசன்சு கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. பின்னர் அதை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன.

ஆனால் அவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக ஒவ்வொருவராக சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு, சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். ஜனாதிபதிக்கு கருணை மனுவும் அனுப்பினார்கள். இதனால் அவர்களை தூக்கில் போடுவது ஏற்கனவே 3 முறை தள்ளிவைக்கப்பட்டது.

பின்னர் டெல்லி சிறைத்துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டு அவர்களை 20-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு தூக்கில் போட மரண வாரண்டு பிறப்பித்தது. அதன்பிறகு பல்வேறு காரணங்களை கூறி அவர்கள் தாக்கல் செய்த மனுக்களும் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டன.

தூக்கு தண்டனைக்கு தடை விதிக்க கோரி இறுதியாக அவர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று அதிகாலை தள்ளுபடி செய்தது. இதனால் 4 பேரும் தூக்கு கயிற்றில் இருந்து தப்பிக்கும் கடைசி முயற்சியும் தோல்வி அடைந்தது.

இதற்கிடையே, 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை திகார் சிறை நிர்வாகம் மும்முரமாக செய்து வந்தது.

சுப்ரீம் கோர்ட்டில் குற்றவாளிகளின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது பற்றிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து, 4 பேரையும் தூக்கில் போடுவதற்கான நடவடிக்கைகளை சிறை அதிகாரிகள் தொடங்கினார்கள். அதிகாலை 3.30 மணிக்கு அதிகாரிகள் அவர்களை தூக்கத்தில் இருந்து எழுப்பி, குளிக்கும்படி கூறினார்கள். ஆனால் 4 பேரும் மறுத்துவிட்டனர். புதிய ஆடை அணியுமாறு கூறியதையும் அவர்கள் ஏற்கவில்லை.

மேலும், வழக்கப்படி அவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. மிகவும் பீதி அடைந்த நிலையில் இருந்த அவர்கள் அதையும் சாப்பிட மறுத்துவிட்டனர். அதன்பிறகு அவர்களிடம், கடைசி விருப்பம் என்ன? என்று அதிகாரிகள் கேட்டனர்.

இதைத்தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு 4 பேரும் தூக்கு மேடைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு டெல்லி மாஜிஸ்திரேட்டு, சிறை மற்றும் போலீஸ் அதிகாரிகள், டாக்டர்கள் தூக்கில் போடும் பணியாளர் பவன் ஜலாட் ஆகியோர் தயாராக இருந்தனர்.

குற்றவாளிகள் முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேரும் தூக்கு மேடையில் வரிசையாக நிறுத்தப்பட்டனர். அவர்களை தூக்கில் போடுவதற்காக கோர்ட்டு பிறப்பித்த மரண வாரண்டு அவர்களுக்கு படித்துக் காட்டப்பட்டது.

பின்னர் அவர்கள் முகத்தை கறுப்பு துணியால் மூடி, ஒவ்வொருவர் கழுத்திலும் தூக்கு கயிறு மாட்டப்பட்டது. சரியாக 5.30 மணிக்கு அதிகாரிகள் சமிக்ஞை அளித்ததும், பணியாளர் பவன் ஜலாட் விசையை அழுத்தினார். இதைத்தொடர்ந்து, 4 பேரும் நின்று கொண்டிருந்த பலகை விலக, அவர்கள் தூக்கில் தொங்கினார்கள், சிறிது நேரத்தில் அவர்களுடைய உயிர் பிரிந்தது. விதிமுறைகளின்படி 4 உடல் களும் 30 நிமிடங்கள் தூக்கில் தொங்கியபடி கிடந்தன.

அதன்பிறகு மருத்துவர்கள் வந்து உடல்களை பரிசோதனை செய்து 4 பேரும் உயிர் இழந்ததை உறுதி செய்தனர். அதற்கான சான்றிதழிலும் கையெழுத்திட்டனர். அதன்பிறகு 4 பேரின் உடல்களும் தூக்கு மேடையில் இருந்து கீழே இறக்கப்பட்டன. பின்னர் உடல்களை ஆம்புலன்சில் ஏற்றி பிரேத பரிசோதனைக்காக தீனதயாள் உபாத்யாய் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன.



கொலையாளிகள் தூக்கிலிடப்படுவதை அறிந்ததும் திகார் சிறை முன்பு ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை அறிந்ததும் அவர்கள், பாரத மாதாவுக்கு ஜே என்று கோஷம் எழுப்பினார்கள். பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். நிர்பயாவுக்கு நீதி கிடைத்துவிட்டதாக அவர்கள் குரல் எழுப்பினார்கள். சிலர் நீதித்துறைக்கு நன்றி தெரிவிக்கும் பதாகைகளையும் கையில் வைத்திருந்தனர்.

இதையொட்டி அங்கு 3-வது எண் சிறை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதற்கிடையே, குற்றவாளிகள் 4 பேரின் குடும்பத்தினரும் தீனதயாள் உபாத்யாய் ஆஸ்பத்திரிக்கு வந்து இருந்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் 4 பேரின் உடல்களும் அவர்களுடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 4 பேரின் உடைமைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நிர்பயா சொந்த ஊரில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

மருத்துவ மாணவி நிர்பயாவின் சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள மேத்வாரா காலா கிராமம் ஆகும். நேற்று நிர்பயா கொலை குற்றவாளிகள் 4 பேரும் தூக்கில் போடப்பட்டதால் அந்த கிராமமே உற்சாகத்தில் திளைத்தது. நேற்று முன்தினம் இரவு முதலே விடிய, விடிய விழித்து இருந்த நிர்பயா உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நேற்று அதிகாலை குற்றவாளிகள் தூக்கில் போடப்பட்டதை அறிந்ததும் பட்டாசு வெடித்தும், ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

நிர்பயாவின் மாமா சுரேஷ் சிங் மற்றும் கிராமத்தினர் சிலர் ‘நிர்பயாவுக்கு நீதி கிடைத்து விட்டது’ என்று கோஷங்கள் எழுப்பியடி, இசைக்கருவிகளை வாசித்து நடனமாடியபடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மொத்தத்தில் அந்த கிராமமே தீபாவளி, ஹோலி பண்டிகையை கொண்டாடுவதுபோல் கோலாகலமாக இருந்தது.

இதுபற்றி நிர்பயாவின் தாத்தா லால்ஜி சிங் கூறுகையில், “கடந்த 2012-ம் ஆண்டு நடந்த அந்த மோசமான சம்பவத்துக்கு பிறகு நாங்கள் தீபாவளி, ஹோலி பண்டிகையை கொண்டாடவில்லை. இன்றுதான்(நேற்று) இரண்டு பண்டிகையையும் சேர்த்து கொண்டாடுகிறோம். குற்றவாளிகள் அனைவரும் கொரோனா வைரசை விட மோசமானவர்கள். இன்று முதல் புதிய விடிவெள்ளி தொடங்கி இருக்கிறது” என்றார்.

ஒரே சமயத்தில் 4 பேருக்கு தூக்கு

டெல்லி திகார் சிறை தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய ஜெயில் ஆகும். இங்கு 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

நிர்பயாவை கற்பழித்து கொன்ற குற்றவாளிகளான முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேர் நேற்று அங்கு தூக்கில் போடப்பட்டனர். இந்த சிறையில் 4 பேர் ஒரே சமயத்தில் தூக்கிலிடப்பட்டது இதுதான் முதல் தடவை ஆகும்.

இதற்கு முன் 2 பேர் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட்டு உள்ளனர். டெல்லியில் கடந்த 1978–ம் ஆண்டு கடற்படை அதிகாரியின் மகள் கீதா, மகன் சஞ்சய் சோப்ரா ஆகியோரை பணத்துக்காக கடத்திச் சென்று கொலை செய்த குற்றவாளிகள் ரங்கா, பில்லா ஆகியோர், 1998–ம் ஆண்டு தூக்கில் போடப்பட்டனர்.

கதறி அழுத வினய் குமார்

4 குற்றவாளிகளும் நேற்று முன்தினம் மாலை முதல் அமைதியாக காணப்பட்டதாகவும், முகத்தில் கவலை எதுவும் தெரியவில்லை என்றும், தூக்கு மேடைக்கு அழைத்துச் சென்ற போது அவர்கள் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால் தூக்கு மேடையை நோக்கி சென்ற போது வினய் குமார் மட்டும் அழுததாகவும் அவர் கூறினார்.

வினய் குமார், முகேஷ் சிங் ஆகியோர் மட்டும் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டனர். அக்‌ஷய் குமார் சிங் தேனீர் மட்டும் அருந்தினார்.

4 பேரும் நேற்று காலை குளிக்கவும் இல்லை, சாப்பிடவும் இல்லை. புதிய ஆடை அணியவும் மறுத்துவிட்டனர். உயில் ஏதாவது எழுத விரும்புகிறீர்களா? என்று அதிகாரிகள் கேட்டதற்கு, அவர்கள் ‘இல்லை’ என்று கூறிவிட்டனர்.

நேற்று முன்தினம் முகேஷ் சிங் குடும்பத்தினர் மட்டும் அவரை சந்தித்து பேசினார்கள்.

720 பேருக்கு தூக்கு தண்டனை

1947–ம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நாடு முழுவதும் 720 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு இருப்பதாக தேசிய சட்ட பல்கலைக்கழகம் சேகரித்த தகவல்கள் மூலம் தெரியவந்து உள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை அதிகம் இருக்கக்கூடும் என்று திட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

சட்ட பல்கலைக்கழகம் சேகரித்த தகவல்களின்படி, அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 354 பேரும், அரியானாவில் 90 பேரும், மத்தியபிரதேசத்தில் 73 பேரும், மராட்டியத்தில் 57 பேரும், கர்நாடகத்தில் 36 பேரும், மேற்கு வங்காளத்தில் 30 பேரும், ஆந்திராவில் 27 பேரும், டெல்லியில் 24 பேரும், பஞ்சாபில் 10 பேரும், ராஜஸ்தானில் 8 பேரும் தூக்கில் போடப்பட்டு உள்ளனர்.

உறுப்புகளை தானம் செய்த முகேஷ் சிங்

4 பேரும் தூக்கில் போடப்படுவதற்கு முன்பு, மேற்கு டெல்லி மாவட்ட மாஜிஸ்திரேட்டு நேகா பன்சால் திகார் சிறைக்கு சென்று ஒவ்வொருவரையும் அவர்களுடைய அறைகளில் சந்தித்தார். சம்பந்தப்பட்ட ஆவணங்களில் கையெழுத்திடுவது தொடர்பாக இந்த சந்திப்பு நடந்தது.

அப்போது முகேஷ் சிங் தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக கூறினார். வினய் குமார், தான் வரைந்த ஓவியங்களை ஜெயில் சூப்பிரண்டிடம் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த தகவலை சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story