மக்கள் ஊரடங்கு நாளிலும் ஷாகின் பாக் போராட்டம் நீடிக்கும்: போராட்டக்காரர்கள் தகவல்


மக்கள் ஊரடங்கு நாளிலும் ஷாகின் பாக் போராட்டம் நீடிக்கும்: போராட்டக்காரர்கள் தகவல்
x
தினத்தந்தி 21 March 2020 2:45 AM GMT (Updated: 21 March 2020 2:45 AM GMT)

மக்கள் ஊரடங்கு நாளிலும் ஷாகின் பாக் போராட்டம் நீடிக்கும் என்று போராட்டக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் பகுதியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மக்கள் நாளை சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஊரடங்கை  மக்கள் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார். 

ஆனால், ஞாயிற்றுக்கிழமையிலும் போராட்டம் நீடிக்கும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். ”ஞாயிற்றுக்கிழமை, நாங்கள் (போராட்டக்காரர்கள்) சிறிய அளவிலான டெண்ட் (கொட்டகை) அமைத்து அதில், 2 பேர் என்ற அளவிலேயே இருந்து போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு டெண்ட்டுகளுக்கும் இடையில் உரிய இடைவெளி அமைக்கப்பட்டு இருக்கும்” என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். மேலும், 70-வயதிற்கு மேற்பட்ட பெண்களும் 10-வயதுக்குக் கீழான சிறுமிகளும் போராட்ட களத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றனர். 

முன்னதாக,  கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் வகையில், 20-க்கு மேற்பட்ட மக்கள் ஒன்று கூட தடை விதிக்கப்படுவதாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்  உத்தரவிட்டார். இந்த உத்தரவு ஷாகின் பாக்கிற்கும் பொருந்தும் எனவும் தெரிவித்தார். 

Next Story