கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: நாடாளுமன்றம் முன்கூட்டியே ஒத்திவைப்பு; நிதி மசோதா நிறைவேறியது


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: நாடாளுமன்றம் முன்கூட்டியே ஒத்திவைப்பு; நிதி மசோதா நிறைவேறியது
x
தினத்தந்தி 23 March 2020 11:00 PM GMT (Updated: 23 March 2020 9:09 PM GMT)

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நாடாளுமன்றம் முன்கூட்டியே ஒத்திவைக்கப்பட்டது. நிதி மசோதா நிறைவேற்றப்பட்டது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை நேற்று வழக்கத்துக்கு மாறாக பிற்பகல் 2 மணிக்கு கூடியது. சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சலைட்டுகளுடனான சண்டையில் பலியான 17 பாதுகாப்பு படையினருக்கும், இதே நாளில் தூக்கிலிடப்பட்ட பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகிய சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர், கொரோனா வைரசால் அசாதாரண சூழ்நிலை நிலவுவதை கருத்தில்கொண்டு, நிதி மசோதாவை விவாதமின்றி நிறைவேற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்று நாடாளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார். அதன்படி, நிதி மசோதா விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.

பின்னர், மத்திய உள்துறை இணை மந்திரி ஜி.கிஷன் ரெட்டி, ராஷ்ட்ரீய ராக்‌ஷ பல்கலைக்கழக மசோதா, தேசிய தடய அறிவியல் மசோதா ஆகிய மசோதாக்களை தாக்கல் செய்தார். அந்த மசோதாக்களின் நகல்கள் தங்களுக்கு அளிக்கப்படவில்லை என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலுவும் அதே கோரிக்கையை விடுத்தார்.

பின்னர், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும்வகையில், சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் உள்பட அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று கை தட்டினர். பொதுவாக, மக்களவையில் மேஜையைத் தட்டுவார்கள். ஆனால், கை தட்டுவது அரிய நிகழ்வாகும்.

அதைத்தொடர்ந்து, மக்களவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். கொரோனா வைரசை ஒடுக்க பாடுபட வேண்டும் என்றும், தனித்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு, ஏப்ரல் 3-ந் தேதிதான் முடிவடைய இருந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, முன்கூட்டியே முடிக்கப்பட்டுள்ளது.


Next Story