தேசிய செய்திகள்

மக்கள் கட்டுப்பாடுடன் இல்லாவிட்டால் பேராபத்து: நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு - பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு + "||" + Disaster if people are out of control: Prime Minister Modi announces 21-day curfew across the country

மக்கள் கட்டுப்பாடுடன் இல்லாவிட்டால் பேராபத்து: நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு - பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு

மக்கள் கட்டுப்பாடுடன் இல்லாவிட்டால் பேராபத்து: நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு - பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு
நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் நரேந்திரமோடி நேற்று இரவு அறிவித்தார்.
புதுடெல்லி,

சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவி விட்டது.

இந்தியாவிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 500-ஐ தாண்டி விட்டது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.


நோய் தாக்கியவர்களுக்கு தனி வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்கள் தேவையின்றி வெளியே நடமாட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக கடந்த 19-ந்தேதி பிரதமர் மோடி தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, நாடு முழுவதும் மக்கள் 22-ந்தேதி தாங்களாகவே ஊரடங்கை கடைப்பிடிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். அதை ஏற்று, அன்றைய தினம் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். இந்தியாவே வெறிச்சோடியது.

இதைத்தொடர்ந்து, தமிழக அரசு, மாநிலம் முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவை அமல்படுத்தியது.

இந்நிலையில், பிரதமர் மோடி மீண்டும் நேற்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது அவர் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார்.

பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

கொரோனா வைரஸ் பிரச்சினை தொடர்பாக மீண்டும் உங்களுடன் பேச வந்துள்ளேன். கடந்த 22-ந்தேதி கடைப் பிடிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கு வெற்றி பெற்றது. இந்த வெற்றியில் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் பங்குள்ளது. நீங்கள் எல்லோருமே பாராட்டுக்கு உரியவர்கள்.

காட்டுத்தீ போல் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ், பல வலிமையான நாடுகளையே செய்வதறியாமல் திகைக்க வைத்துள்ளது. அந்த நாடுகள் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் சவால் கள் அதிகரித்து வருகின்றன.

கொரோனா வைரசை கட்டுப்படுத்த ‘தனித்து இருப்பது’ மட்டுமே ஒரே தீர்வு என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். தனித்து இருத்தல் என்பது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனுக்கும்தான். ஏன், பிரதமருக்கு கூட பொருந்தும்.

தனித்து இருப்பதை நாம் அலட்சியப்படுத்தினால், அதற்கு இந்தியா கடுமையான விலையை கொடுக்க வேண்டி இருக்கும்.

ஆகவே, இன்று (நேற்று) நள்ளிரவு 12 மணி முதல், நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்படும். இது, மக்கள் ஊரடங்கை விட கடுமையானதாக இருக்கும்.

இந்த ஊரடங்கால் நிதி இழப்பை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆனால், மக்களின் பாதுகாப்புக்கு இது முக்கியம். நாடுதழுவிய ஊரடங்கு, 21 நாட்களுக்கு அமலில் இருக்கும்.

வீட்டை விட்டு ஒரு அடி எடுத்து வைத்தால் கூட கொரோனா வைரஸ் உங்கள் வீட்டுக்குள் நுழைய வழி வகுத்து விடும். ஆகவே, வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று நாட்டு மக்களை கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன். (‘கொரோனா என்றால், யாரும் சாலைக்கு வரக்கூடாது என்று அர்த்தம்’ என்று எழுதப்பட்ட பதாகையை பிரதமர் காட்டினார்).

இந்த 21 நாள் ஊரடங்கை பின்பற்றாவிட்டால், நாம் 21 ஆண்டுகள் பின்னுக்கு தள்ளப்படுவோம். இது, பொறுமையையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டிய நேரம். கட்டுப்பாடாக இல்லாவிட்டால், பேராபத்து ஏற்படும்.

நமது பாதுகாப்புக்காக தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்து பணியாற்றும் நபர் களை நினைத்து பாருங்கள் என்று கைகூப்பி உங்களை கேட்டுக்கொள்கிறேன்.அதே சமயத்தில், அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க மத்திய, மாநில அரசுகள் எல்லா நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றன. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான மருத்துவ வசதிகளை வலுப்படுத்த மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த சூழ்நிலையில், சுகாதார பணிகளுக்கு முதல் முன்னுரிமை அளிக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக்கொள்கிறேன்.

வதந்திகளையும், மூட நம்பிக்கைகளையும் நம்பாதீர்கள். மருத்துவர்களை கலந்தாலோசிக்காமல், எந்த மருந்தையும் சாப்பிடாதீர்கள். உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இந்த சவாலில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.