தேசிய செய்திகள்

ஒலிம்பிக் போட்டி தள்ளிவைக்கப்பட்டதற்கு மத்திய விளையாட்டு துறை மந்திரி வரவேற்பு + "||" + Federal Sports Minister welcomes postponed Olympic competition

ஒலிம்பிக் போட்டி தள்ளிவைக்கப்பட்டதற்கு மத்திய விளையாட்டு துறை மந்திரி வரவேற்பு

ஒலிம்பிக் போட்டி தள்ளிவைக்கப்பட்டதற்கு மத்திய விளையாட்டு துறை மந்திரி வரவேற்பு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டதற்கு மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ வரவேற்பு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி, 

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளின் ஒலிம்பிக் கமிட்டியினர் கொடுத்த அழுத்தத்தை தொடர்ந்து, சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பாச்சுடன், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நேற்று முன்தினம் டெலிபோனில் நடத்திய ஆலோசனையை தொடர்ந்து இந்த போட்டி ஒரு ஆண்டு தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு (2021) கோடைக்காலத்துக்கு முன்பு நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒத்திவைக்கப்பட்டு இருப்பதற்கு பல்வேறு நாட்டு ஒலிம்பிக் கமிட்டிகளும், சர்வதேச விளையாட்டு சம்மேளனங்களும் வரவேற்பு தெரிவித்து இருக்கின்றன. மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ ஒலிம்பிக் போட்டி தள்ளிபோடப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘உலகளவில் நிலவும் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை தள்ளிவைத்து சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் எடுத்து இருக்கும் முடிவு வரவேற்கத்தக்கது. சர்வதேச வீரர்களின் நலன் காக்க இந்த முடிவு அவசியமானதாகும். போட்டி தள்ளிவைக்கப்பட்டு இருப்பதால் வீரர்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம். நமது வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக அரசு முழு உதவிகளையும், வாய்ப்புகளையும் அளிக்கும். அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் நம்மால் அதிக பதக்கங்களை வெல்ல முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிருஷ்ணன் ஆகியோரும் வரவேற்றுள்ளனர். நீரஜ் சோப்ரா கருத்து தெரிவிக்கையில், ‘ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைத்து இருப்பது ஆச்சரியம் அளிக்கவில்லை. தற்போதைய சூழ்நிலையில் இது எதிர்பார்த்த முடிவு தான். வீரர்களை பொறுத்தமட்டில் இது வரவேற்கத்தக்க விஷயமாகும்’ என்றார். விகாஸ் கிருஷ்ணன் கூறுகையில், ‘கொரோனா வைரஸ் தாக்கத்தை கருத்தில் கொண்டு ஒலிம்பிக் போட்டியை தள்ளிவைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தள்ளிவைத்து இருப்பது நாம் போட்டிக்கு தயாராகுவதை பாதிக்கலாம். இருப்பினும் கூடுதல் நேரம் கிடைத்து இருப்பது ஒலிம்பிக் போட்டிக்கு நாம் இன்னும் சிறப்பாக தயாராக உதவும் என்று நினைக்கிறேன். ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வெல்வதே எனது இலக்காகும்’ என்று தெரிவித்தார்.

இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா நேற்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், ‘ஒலிம்பிக் போட்டியை ஒரு ஆண்டு தள்ளிவைத்து இருப்பது சில வீரர்களின் விளையாட்டு வாழ்க்கையிலும், தகுதி பெறுவதிலும் தாக்கத்தை விளைவிக்கலாம். வரும் மாதங்களில் இதற்கு முடிவு காண்பதுடன், அவர்களுக்கு தேவையான ஆதரவு அளிக்கப்பட வேண்டியது அவசியமானதாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள கருத்தில், ‘இது மிகவும் புத்திசாலித்தனம் வாய்ந்த சிறப்பான முடிவாகும்’ என்று தெரிவித்து இருப்பதுடன், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைத்து இருப்பதால் 2024-ம் ஆண்டு பாரிசில் (பிரான்ஸ்) நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் எந்தவித தாக்கமும் ஏற்படாது. அந்த போட்டி திட்டமிடப்பட்டுள்ள அட்டவணைப்படி நடை பெறும் என்று பாரிஸ் ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒலிம்பிக் போட்டி ரத்தானால் 4 ஆண்டு கால உழைப்பு வீணாகும் - இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் கவலை
ஒலிம்பிக் போட்டி ரத்தானால் 4 ஆண்டு கால உழைப்பு வீணாகி விடும் என்று இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு கூறியுள்ளார்.
2. ‘ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது கடினம்’- டுட்டீ சந்த்
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது கடினம் என டுட்டீ சந்த் தெரிவித்துள்ளார்.
3. ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுபவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு: அனைத்து தேசிய பயிற்சி முகாம்களும் தள்ளிவைப்பு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுபவர்களுக்கு நடைபெறும் முகாமை தவிர மற்ற அனைத்து தேசிய பயிற்சி முகாம்களும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
4. ஒலிம்பிக் போட்டி ஓராண்டு தள்ளிபோகுமா?
ஒலிம்பிக் போட்டி ஓராண்டு தள்ளிபோகுமா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
5. 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி
அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற்றுள்ளது.