”அரசுக்கு ஆதரவாக இருப்போம்” ஊரடங்கு தொடர்பாக பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்


”அரசுக்கு ஆதரவாக இருப்போம்” ஊரடங்கு தொடர்பாக பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்
x
தினத்தந்தி 26 March 2020 7:11 AM GMT (Updated: 26 March 2020 7:11 AM GMT)

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கை வரவேற்பதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த அறிவிப்பை வெளியிட்டு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.  இதையடுத்து, நாடு முழுவதும் ஊரடங்கு தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வெளியில் அவசியம் இன்றி சுற்றுவோரை போலீசார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர். 

கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கிற்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கை வரவேற்று கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து சோனியா காந்தி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது;- “ காங்கிரஸ் கட்சியின் தலைவராக,  நோய் தொற்றை தடுக்க அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் நாங்கள் ஆதரவு அளிப்போம்” என்று தெரிவித்துள்ளார். 

மேலும்,  கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கான புதிய மருத்துவமனைகளை விரைந்து கட்ட வேண்டும். 100 நாள் திட்ட தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள், மூடப்படும் ஆலைகளில் இருந்து நீக்கப்படும் ஊழியர்கள், கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வங்கி கடன்களுக்காக கட்டப்படும் அனைத்து இஎம்ஐக்களையும், 6 மாதங்களுக்கு ஒத்திவைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்துள்ளார். 

Next Story