கன்டெய்னர் லாரிகளில் பதுங்கி சென்ற பயணிகள் - கையும் களவுமாக பிடித்த போலீஸ்


கன்டெய்னர் லாரிகளில் பதுங்கி சென்ற பயணிகள் - கையும் களவுமாக பிடித்த போலீஸ்
x
தினத்தந்தி 27 March 2020 7:00 AM GMT (Updated: 27 March 2020 7:00 AM GMT)

மராட்டியத்தில் கன்டெய்னர் லாரிகளில் பதுங்கி சென்ற பயணிகளை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

மும்பை,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இதன் காரணமாக மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. 

மத்திய அரசின் இந்த ஊரடங்கால், வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களுக்கு சென்று பணியாற்றிய தொழிலாளர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்த்து, அவரவர் தங்கும் இடங்களிலேயே இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ள போதிலும், பல தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப ஆபத்தான முயற்சியை கையில் எடுக்கவும் தவறுவதில்லை. 

அந்த வகையில், தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்த ராஜஸ்தான் தொழிலாளர்கள், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் 2 கன்டெய்னர் லாரிகளில் பயணித்துள்ளனர். லாரிகளில் மேம்போக்காக அத்தியாவசிய பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. உள்ளே 300 தொழிலாளர்கள் நின்று கொண்டனர்.  மராட்டியம் வழியாக ராஜஸ்தானுக்கு லாரிகள் சென்றன. மராட்டியத்தின் எல்லை மாவட்டமாக யவத்மாலில் அதிகாரிகள் தீவிர சோதனையை மேற்கொண்டனர். இதில், அந்த 300 தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டார்கள். கும்பல் கும்பலாக கன்டெய்னர் லாரிக்குள் இருந்த தொழிலாளர்களைப் பார்த்ததும், அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

தொழிலாளர்களை ஏற்றி வந்த லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களிடம் மருத்துவ சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story