ரெயில் பெட்டிகள் கொரோனா நோயாளிகளின் தனி வார்டுகளாக மாற்றம் - மாதிரியை உருவாக்கியது ரெயில்வே நிர்வாகம்


ரெயில் பெட்டிகள் கொரோனா நோயாளிகளின் தனி வார்டுகளாக மாற்றம் - மாதிரியை உருவாக்கியது ரெயில்வே நிர்வாகம்
x
தினத்தந்தி 28 March 2020 8:46 PM GMT (Updated: 28 March 2020 8:46 PM GMT)

ரெயில்களில் உள்ள ஏ.சி. வசதி இல்லாத சாதாரண வகுப்பு பெட்டிகளை கொரோனா வைரஸ் தாக்குதல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனி வார்டுகளாக மாற்றி ஒரு மாதிரியை ரெயில்வே நிர்வாகம் வடிவமைத்து உள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமாகி வருவதால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகளுடன் கூடிய ஆஸ்பத்திரிகள் அதிகமாக தேவைப்படுகிறது. இதை உணர்ந்த ரெயில்வே நிர்வாகம் ரெயில் பெட்டிகளை தனி வார்டுகளாக மாற்றி ஒரு மாதிரியை வடிவமைத்து உள்ளது.

இதுகுறித்து வடக்கு ரெயில்வே செய்தி தொடர்பாளர் தீபக் குமார் கூறியதாவது:-

ஒவ்வொரு ரெயில்வே மண்டலமும் வாரந்தோறும் 10 ரெயில் பெட்டிகளை உற்பத்தி செய்கிறது. எனவே தேவை ஏற்பட்டால் பயன்படுத்துவதற்காக ஏ.சி. வசதி இல்லாத, 3 டயர் படுக்கை வசதி கொண்ட ரெயில் பெட்டிகளை கொரோனா நோயாளிகளுக்கான தனி வார்டுகளாக மாற்றி உள்ளோம்.

அதன்படி நடுவில் உள்ள படுக்கை (மிடில் பெர்த்) அகற்றப்படும். பெட்டியின் தரைப்பகுதி பிளைவுட் பதிக்கப்பட்டு இருக்கும். ரெயில் பெட்டியில் நடந்து செல்லும் பாதையில் அந்த பகுதியை தனிமைப்படுத்தும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும்.

ஒவ்வொரு பெட்டியிலும் 10 தனி வார்டுகள், மருத்துவ கருவிகள் வைப்பதற்கு இடம், 220 வோல்ட் மின்சார வசதி, திரைச்சீலைகள் ஆகியவை இருக்கும்.

ஒரு பெட்டியில் இருக்கும் 4 கழிப்பறைகளில் 2, குளியல் அறைகளாக மாற்றப்படும். அந்த குளியல் அறையில் கழிப்பறை கோப்பை அகற்றப்பட்டு, தேவையான தரைப்பகுதி அமைக்கப்படும். கைகழுவும் பேசின், ஒரு பக்கெட், ஒரு மக் ஆகியவை இருக்கும்.

நோயாளிகளின் தனி வார்டுகள் மட்டுமின்றி, டாக்டர் பரிசோதிப்பதற்கான அறைகள், மருந்து கடைகள், தீவிர சிகிச்சை பிரிவு, சமையலறை ஆகிய வசதிகளும் இருக்கும்.

இது கவுகாத்தி காமாக்யாவில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில் மாற்றி அமைக்கப்பட்டது. மேலும் சில ரெயில்வே மண்டலங்களும் இதற்கான முயற்சியில் உள்ளன.

சிறந்த வடிவமைப்பு அடுத்த சில நாட்களில் தயாராகிவிடும். அதன்பின்னர் நாங்கள் தேவைப்படும் இடத்தில் இந்த சேவையை வழங்குவோம்.

பல ரெயில்வே மண்டலங்கள் ஏற்கனவே வென்டிலேட்டர், படுக்கைகள், டிராலிகள், முகக்கவசங்கள் போன்ற பல்வேறு அத்தியாவசிய கருவிகளை உற்பத்தி செய்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல தெற்கு ரெயில்வேயிலும் ரெயில் பெட்டிகளை வார்டுகளாக மாற்றும் பணி தொடங்கி உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

Next Story