இந்தியாவில் கொரோனா சவால்களை சந்திக்க ஏற்பாடுகள் தயார்; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது


இந்தியாவில் கொரோனா சவால்களை சந்திக்க ஏற்பாடுகள் தயார்; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது
x
தினத்தந்தி 28 March 2020 11:45 PM GMT (Updated: 28 March 2020 11:44 PM GMT)

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது. இனி வரும் சவால்களை சந்திக்க ஏற்பாடுகள் தயாராகின்றன.

புதுடெல்லி, 

இந்தியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இருந்து 21 நாள் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் பரவுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

நேற்று முன்தினத்துக்கு (வெள்ளிக்கிழமைக்கு)பின்னர் இந்தியாவில் 149 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதித்து இருப்பது உறுதியாகி உள்ளது. 2 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதும் பதிவாகி உள்ளது.

இதைத் தொடர்ந்து நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

இதையொட்டி மத்திய சுகாதார அமைச்சக இணைச்செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில், “தற்போது எங்கெல்லாம் கூடுதலாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கிறதோ அங்கெல்லாம் அரசு கவனம் செலுத்துகிறது. பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிவதில், கண்காணிப்பதில் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த வைரஸ் பாதித்தவர்களுக்கான சிறப்பு ஆஸ்பத்திரிகளை அமைப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். இது தொடர்பாக மாநில அரசுகளுடன் தொடர்ந்து விவாதித்து வருகிறோம்” என குறிப்பிட்டார்.

தீவிர சுவாச கோளாறு பிரச்சினைகள் உடையவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என சோதித்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோருக்கு மலேரியா காய்ச்சலுக்கான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து தரப்பட்டதில் அவர்களுக்கு வைரசின் தீவிரம் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தொற்றுநோய் பிரிவு தலைவர் ராமன் கங்காகேத்கார் தெரிவித்தார்.

சமூக அளவிலான பரவலுக்கு கொரோனா வைரஸ் செல்லக்கூடும் என்ற அச்சம் வலுத்து வருகிற நிலையில், இனி வரக்கூடிய சவால்களை சந்திப்பதற்கான தயார் ஆவதற்கான ஏற்பாடுகளில் அரசு முனைப்பாக உள்ளது.

இதற்காக ராணுவத்தின் 28 ஆஸ்பத்திரிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 5 ஆஸ்பத்திரிகளில் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

பாரத மின்னணு நிறுவனம், செயற்கை சுவாச கருவிகளை தயாரித்து அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

டி.ஆர்.டி.ஓ. என்னும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பு கவச கருவிகள் தயாரிப்பதுடன், சானிடைசர் உள்ளிட்டவற்றையும் வினியோகித்து வருகிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான சாதனங்கள் வாங்குவதற்காக ராணுவ படைகளுக்கும், படை தளபதிகளுக்கும் நெருக்கடி கால நிதி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா பாதிப்புக்கு ஆளாகிறவர்களுக்காக படுக்கைகளை ஒதுக்கி வைக்க ஏற்பாடு செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

Next Story