பெட்ரோல், டீசல், கியாஸ் தேவையான இருப்பு உள்ளது- இந்திய எண்ணெய் கழக தலைவர் அறிவிப்பு


பெட்ரோல், டீசல், கியாஸ் தேவையான இருப்பு உள்ளது- இந்திய எண்ணெய் கழக தலைவர் அறிவிப்பு
x
தினத்தந்தி 30 March 2020 1:00 AM GMT (Updated: 30 March 2020 1:00 AM GMT)

பெட்ரோல், டீசல், கியாஸ் போதுமான இருப்பு உள்ளதால் ஊரடங்கு காலத்தில் தட்டுப்பாடு ஏற்படாது என்று இந்திய எண்ணெய் கழக தலைவர் தெரிவித்தார்.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானம், ரெயில் மற்றும் சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த வாகன இயக்கமும் ஸ்தம்பித்து உள்ளது. இது பெட்ரோல், டீசல், மற்றும் விமான பெட்ரோல் விற்பனையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய எண்ணெய் கழக தலைவர் சஞ்சீவ் சிங்கின் தந்தை, 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பித்த நாளில் இறந்தார். அதனையும் பொருத்துக்கொண்டு நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சென்றடைகிறதா என்பதை மேற்பார்வையிட்டு வருகிறார்.

எரிபொருள் நிலைமை பற்றி சஞ்சீவ் சிங் கூறியதாவது:-

மார்ச் மாதம் பெட்ரோல் தேவை 8 சதவீதமாகவும், டீசல் தேவை 16 சதவீதமாகவும் சரிந்துள்ளது. விமான பெட்ரோல் தேவை 20 சதவீதமாக சரிந்தது. தேவை சரிந்துள்ளதால் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் இயங்குவதும் 30 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.


ஆனால் சமையல் கியாஸ் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிலிண்டர் நிரப்புவதற்கான (ரீபில்) தேவை 200 மடங்கு அதிகரித்துள்ளது. மக்கள் பீதியடைந்து முதல் சிலிண்டர் காலியாகும் முன்பே அடுத்த சிலிண்டருக்கு பதிவு செய்து விடுவதே இதற்கு காரணம். ஆனால் சிலிண்டர் வினியோகிக்க சென்ற ஊழியர்கள் சிலிண்டர் காலியாகவில்லை என்றதும் வினியோகிக்காமலேயே திரும்பி விடுகிறார்கள்.

இதில் பீதியடைவதற்கு எதுவுமே இல்லை. எங்களிடம் தேவையான அளவு சிலிண்டர் இருப்பு உள்ளது. மக்கள் பீதியடைந்து பதிவு செய்தால் இந்த திட்டத்தில் தேவையில்லாத ஒரு குழப்பத்தை ஏற்படுத்திவிடும். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவை ஏப்ரல் மாதமும், அதற்கு மேலும் தேவையான அளவுக்கு இருப்பு வைத்துள்ளோம். எனவே ஊரடங்கு காலத்தில் தட்டுப்பாடு எதுவும் ஏற்படாது.

பெட்ரோல் பங்க்குகள், கியாஸ் வினியோகம் அனைத்தும் வழக்கம்போல இயங்குகின்றன. கூடுதலாக எரிபொருள் தேவைப்பட்டாலும், அதற்கு ஏற்ப உற்பத்தி செய்வதற்கு சுத்திகரிப்பு ஆலைகளும் தயாராக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story