வெளிமாநில தொழிலாளர்கள் மராட்டியத்தை விட்டு வெளியேற வேண்டாம் - உத்தவ் தாக்கரே வேண்டுகோள்


வெளிமாநில தொழிலாளர்கள் மராட்டியத்தை விட்டு வெளியேற வேண்டாம் - உத்தவ் தாக்கரே வேண்டுகோள்
x
தினத்தந்தி 30 March 2020 1:42 AM GMT (Updated: 30 March 2020 1:42 AM GMT)

வெளிமாநில தொழிலாளர்கள் மராட்டியத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மும்பை,

கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து மும்பை உள்ளிட்ட மராட்டியம் முழுவதும் சிக்கி தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது மாநிலங்களுக்கு செல்வதற்காக படையெடுத்து உள்ளனர். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடைபயணமாக சென்று மாநில எல்லைகளில் சிக்கி உள்ளனர். மேலும் பலர் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களில் சென்று போலீசில் சிக்கி கொண்டு உள்ளனர்.

வேலை இல்லாததால் பிழைக்க வழியின்றியும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதில் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்த நிலையில் பிழைப்புக்காக புலம்பெயர்ந்து வந்து மராட்டியத்தில் தங்கியிருக்கும் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் தவிப்பு எனக்கு புரிகிறது. ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை முக்கியம். எனவே நீங்கள் விபரீதத்தை உணராமல் மாநிலத்தை விட்டு வெளியேற முயற்சிப்பது சரியானது அல்ல. சிக்கி தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் அனைவருக்கும் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு செய்து தரும். சிவ்போஜன் உணவகத்தில் மதிய உணவின் விலை ரூ.10-ல் இருந்து ரூ.5 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. நீங்கள் மராட்டியத்தில் தங்களது இருப்பிடங்களிலேயே தங்கியிருங்கள். வெளியேற முயற்சி செய்ய வேண்டாம். வரும் நாட்களில் கொரோனா தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அதன் தாக்கத்தை அதிகரிக்க காரணமாகி விடக்கூடாது.

பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வலுவான காரணங்கள் இன்றி வீட்டை விட்டு வெளியேற கூடாது. போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். கடும் நடவடிக்கைக்கு போலீசாரை கட்டாயப்படுத்தி விட வேண்டாம்.கொரோனா பாதிப்பில் இருந்து முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, எனது உறவினர் ராஜ்தாக்கரே ஆகியோருடன் பேசினேன். அவர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

கொரோனா தடுப்பு பணிக்காக பிரபல வங்கியாளர் உதய் கோடக் முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு ரூ.10 கோடி தருவதாக தெரிவித்து உள்ளார். பல தொழில் அதிபர்கள் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளனர்.மாநிலம் ஏறத்தாழ 8 நாட்களாக முடங்கி கிடக்கிறது. எஞ்சிய நாட்களையும் கடந்து செல்வோம். இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.

Next Story