தாராவி பகுதியைச் சேர்ந்த 56 வயது நபர் கொரோனாவுக்கு பலி
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மும்பையில் உள்ள தாராவி பகுதியைச் சேர்ந்த 56 வயது நபர் உயிரிழந்துள்ளார்.
மும்பை,
இந்தியாவில் ஆயிரத்து 834 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அவர்களில் 143 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்ஜார்ச் செய்யப்பட்டுள்ளனர். இந்த நோயின் காரணமாக இந்தியாவில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் வைரஸ் பரவும் வேகம் தீவிரமடைந்து வருகிறது. மராட்டிய மாநிலத்தில் 335 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பாதிப்பு காரணமாக அங்கு 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பையில் உள்ள தாராவி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் இருமல், காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகளுடன் மும்பை சியோன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதனை சேர்ந்த மருத்துவர்கள் கொரோனா வைரஸ் பரவியிருப்பதை உறுதி செய்து தீவிர சிகிச்சை அளித்துவந்தனர். இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த அந்த நபர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆசியாவிலேயே மிகவும் குறைவான பரப்பளவில் (5 சதுர கிலோமீட்டர்) 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழும் இடமாக தாராவி உள்ளது. அப்பகுதியை சேர்ந்த நபர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் பலருக்கும் வைரஸ் பரவி இருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
இதற்கிடையே, கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபரின் குடியிருப்பு சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த குடியிருப்பில் இருப்பவர்கள் அனைவருக்கும் இன்று வைரஸ் பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story