ஊரடங்கை மீறி கர்நாடகாவுக்குள் நுழைந்த வாலிபர்கள்; தடுத்த போலீஸ்காரர் கல்வீச்சில் காயம்


ஊரடங்கை மீறி கர்நாடகாவுக்குள் நுழைந்த வாலிபர்கள்; தடுத்த போலீஸ்காரர் கல்வீச்சில் காயம்
x
தினத்தந்தி 3 April 2020 3:20 PM GMT (Updated: 2020-04-03T20:50:01+05:30)

கேரளாவில் இருந்து கர்நாடக எல்லைக்குள் ஊரடங்கை மீறி நுழைந்த வாலிபர்களை தடுத்த காவல் அதிகாரி கல்வீச்சில் காயம் அடைந்து உள்ளார்.

பெங்களூரு,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.  கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.  கடந்த மார்ச் 24ந்தேதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  அன்று நள்ளிரவு முதல் வரும் 14ந்தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.  இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு தேவையின்றி வெளியே செல்ல தடை விதிக்கப்படுகிறது.

இதேபோன்று மாநில மற்றும் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு உள்ளன.  அத்தியாவசிய தேவைக்கான பொருட்களுக்கான கடைகளே திறந்து வைக்கப்பட்டு உள்ளன.  வெளியே வாகனங்களில் சுற்றி திரிவோரை கண்காணிக்கும் பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் சுல்லியா நகர பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.  கேரளாவில் இருந்து சில வாலிபர்கள் அந்த வழியே கர்நாடக எல்லைக்குள் நுழைய முயன்றுள்ளனர்.

அவர்களை காவல் அதிகாரி ஒருவர் தடுத்து நிறுத்தி உள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் அவரை நோக்கி கற்களை வீசி எறிந்துள்ளனர்.  இதில் அவர் பலத்த காயமுற்றார்.  பின்னர் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.

Next Story