கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கை பற்றி கவர்னர்களுடன் ஜனாதிபதி அவசர ஆலோசனை; டெல்லி சம்பவங்கள் பின்னடைவை ஏற்படுத்திவிட்டதாக வருத்தம்


கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கை பற்றி கவர்னர்களுடன் ஜனாதிபதி அவசர ஆலோசனை; டெல்லி சம்பவங்கள் பின்னடைவை ஏற்படுத்திவிட்டதாக வருத்தம்
x
தினத்தந்தி 3 April 2020 11:15 PM GMT (Updated: 2020-04-04T04:42:20+05:30)

கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கை பற்றி கவர்னர்களுடன் ஜனாதிபதி அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், அரசின் முயற்சியில் டெல்லியில் நடந்த 2 சம்பவங்கள் பின்னடைவை ஏற்படுத்தி விட்டதாக வருத்தம் தெரிவித்தார்.

புதுடெல்லி, 

கொரோனா என்ற கண்ணுக்குத் தெரியாத வைரஸ் மனித குலத்தின் மாபெரும் எதிரியாக உருவெடுத்துள்ளது. இந்த வைரஸ், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லியில் இருந்து கொண்டு காணொலி காட்சி வழியாக மாநிலங்களின் கவர்னர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்கள், நிர்வாகிகளுடன் நேற்று அவசரமாக ஆலோசனை நடத்தினார். இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் கலந்து கொண்டார்.

அவர்களிடம், தங்களது மாநிலங்களில் கொரோனா வைரஸ் தடுப்புக்காக பின் பற்றப்படுகிற நடவடிக்கைகள் மற்றும் தயார்நிலை பற்றிய நிலவரங்களை கவர்னர்கள் விளக்கமாக எடுத்துக்கூறினர்.அப்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 21 நாள் ஊரடங்கு உத்தரவால், நாட்டில் யாரும் பட்டினி கிடந்து விடக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சில இடங்களில் டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், போலீசார் மீது நடந்த தாக்குதல்கள் குறித்து அவர் கவலை தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் முன்மாதிரியுடனும், ஒழுக்கமுடனும், ஒற்றுமையுடனும் இருப்பதாக பாராட்டினார்.

அதே நேரத்தில், டெல்லி ஆனந்த் விகார் மற்றும் நிஜாமுதீன் சம்பவங்கள், கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தி விட்டதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருத்தம் தெரிவித்தார்.

டெல்லி நிஜாமுதீனில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கும் கொரோனா தொற்றி இருப்பதும், அதே போன்று ஆனந்த் விகார் பஸ் முனையத்திலும், ரெயில் தடத்திலும் உத்தர பிரதேசத்தில் உள்ள சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஒரே நாளில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டு விட்டதும் பிரச்சினையானது நினைவுகூரத்தக்கது.

இந்த ஆலோசனையின்போது, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசுகையில், மக்களின் துன்பங்களை போக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார். அதே நேரம், ஏழை எளிய மக்களுக்கும், நலிவடைந்த பிரிவினருக்கும் சமூகத்தினர் அனைவரும் முன்வந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Next Story