பிரதமர் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் மக்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றினர்


பிரதமர் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் மக்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றினர்
x
தினத்தந்தி 5 April 2020 4:02 PM GMT (Updated: 2020-04-05T22:03:19+05:30)

பிரதமர் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதுமுள்ள மக்கள் தங்கள் வீடுகளில் இரவு 9 மணியளவில் விளக்குகளை ஏற்றி ஒளியூட்டினர்.

புதுடெல்லி,

உலகையே அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ், இந்தியாவில் வேகமாக பரவ தொடங்கி இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் நோய்க்கிருமி பரவும் வேகத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நேற்று முன்தினம் உரையாற்றும்பொழுது, வருகிற 5ந்தேதி (இன்று) இரவு 9 மணிக்கு உங்கள் இல்லங்களில் எரியும் அனைத்து விளக்குகளையும் அணைத்து விடுங்கள். உங்கள் வீட்டின் வாசற்படியில் இருந்தோ அல்லது பால்கனியில் இருந்தோ, ஒளியேற்றப்பட்ட மெழுகுவர்த்தி, அகல் விளக்கு, டார்ச் லைட் அல்லது உங்கள் மொபைல் போனின் டார்ச் ஒளியை ஏந்தி 9 நிமிடங்கள் நில்லுங்கள் என கூறினார்.

கொரோனா பாதிப்புக்கு எதிரான இந்த போராட்டத்தில் நாட்டின் குடிமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.  இதற்காக நாடு முழுவதும் பல இடங்களில் மக்கள் அகல் விளக்குகளை வாங்கி சென்றனர்.

பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு ஏற்ப மக்கள் தங்களது இல்லங்களில் இரவு 9 மணியளவில் விளக்குகள், மெழுகுவர்த்திகள் ஆகியவற்றை ஏற்றி வீடுகளுக்கு ஒளியூட்டினர்.

தமிழகத்தில் குடியிருப்பு ஒன்றின் முன்பு இந்திய வரைபடம் போன்று விளக்குகளை எரியவிட்டு ஒற்றுமைக்கான ஒளியை ஏற்றினர்.  நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் முன் மெழுகுவர்த்தி ஏந்தி நின்றார்.

உத்தர பிரதேசத்தில் முதல் மந்திரி ஆதித்யநாத் தனது இல்லத்தில் ஓம் என்ற வடிவில் விளக்கேற்றினார்.  தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் மெழுகுவர்த்தி ஒன்றை ஏந்தினார்.

தமிழக முதல் மந்திரி, துணை முதல் மந்திரி மற்றும் அமைச்சர்கள் தங்களது வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றினர்.  இதேபோன்று புதுச்சேரி உள்பட பல்வேறு மாநில முதல் மந்திரிகள், ஆளுநர்கள், மத்திய, மாநில மந்திரிகள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் விளக்கேற்றினர்.

இதேபோன்று குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தனது வீட்டில் அனைத்து விளக்குகளையும் அணைத்து விட்டு தனது மனைவியுடன் ஆள் உயர விளக்கு ஒன்றில் தீபமேற்றினார்.

Next Story