பராமரிப்பவரிடம் இருந்து பரவியதா? அமெரிக்காவில் புலிக்கு கொரோனா வைரஸ் பரவியது உறுதியானது - இந்திய உயிரியல் பூங்காக்களில் உஷார் நடவடிக்கை


பராமரிப்பவரிடம் இருந்து பரவியதா? அமெரிக்காவில் புலிக்கு கொரோனா வைரஸ் பரவியது உறுதியானது - இந்திய உயிரியல் பூங்காக்களில் உஷார் நடவடிக்கை
x
தினத்தந்தி 6 April 2020 9:19 PM GMT (Updated: 2020-04-07T02:49:47+05:30)

அமெரிக்க உயிரியல் பூங்காவில் உள்ள புலிக்கு கொரோனா வைரஸ் பரவியது உறுதியானது. இதையடுத்து இந்திய உயிரியல் பூங்காக்களில் உஷார் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

புதுடெல்லி, 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிராங்ஸ் உயிரியல் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவில் உள்ள 4 வயதான மலேசிய பெண் புலிக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது.

இதை அங்கு அயோவாவில் உள்ள தேசிய கால்நடைகள் சேவை ஆய்வுக்கூடம் உறுதி செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான பெண் புலியின் பெயர் நதியா ஆகும். அமெரிக்காவில் விலங்கு ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

அந்த நேரத்தில், கொரோனா வைரஸ் பாதித்ததற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்த பராமரிப்பாளரிடம் இருந்துதான் பெண் புலிக்கு கொரோனா வைரஸ் பரவி இருக்க வேண்டும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மேலும், நதியா புலியின் சகோதரி நசூல் மற்றும் 2 அமுர் புலிகள், 3 ஆப்பிரிக்க சிங்கங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவியதற்கான அறிகுறிகள் இருப்பதாக பூங்கா நிர்வாகம் கூறுகிறது. இருப்பினும் இவை அனைத்தும் பூரண குணம் அடையும் என நம்பிக்கையும் வெளியிட்டுள்ளது.

தற்போது இந்த விலங்குகளுக்கு கொரோனா அறிகுறிகள் காரணமாக பசியின்மை ஏற்பட்டிருந்தாலும், மற்றபடி நன்றாக செயல்படுவதாகவும் நியூயார்க் தகவல்கள் கூறுகின்றன. இது குறித்த தகவல்கள் வெளியானதும் இந்தியாவில் உள்ள உயிரியல் பூங்காக்கள் அனைத்தும் உஷார்படுத்தப்பட்டன.

இதற்கான நடவடிக்கையை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் எடுத்தது. இதையொட்டி நாட்டில் உள்ள அனைத்து உயிரியல் பூங்கா நிர்வாகங்களுக்கும், மத்திய உயிரியல் பூங்கா ஆணைய உறுப்பினர் செயலாளர் எஸ்.பி.யாதவ் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

நியூயார்க் நகரில் பிராங்ஸ் உயிரியல் பூங்காவில் உள்ள புலிக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதை அமெரிக்க விவசாய துறையின் தேசிய கால்நடைகள் சேவை ஆய்வுக் கூடம் உறுதி செய்துள்ளது.

எனவே நமது நாட்டில் உள்ள உயிரியல் பூங்காக்கள் அனைத்தும் மிகவும் உஷாருடன் இருக்க வேண்டும். ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் மூலம் விலங்குகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அவற்றின் நடத்தையில் வித்தியாசம் உள்ளதா, கொரோனா வைரசுக்கான அறிகுறிகள் உள்ளனவா என்பதை கண்காணிக்க வேண்டும்.

பாலூட்டிகள் குறிப்பாக பூனைகள், மர நாய்கள் மற்றும் பிற விலங்குகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். சந்தேகத்துக்கு இடம் அளிக்கக் கூடிய விலங்குகளிடம் இருந்து மாதிரிகளை எடுத்து மத்திய பிரதேச மாநிலம், போபாலில் அமைந்துள்ள உயர்பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான தேசிய இன்ஸ்டி டியூட்டுக்கும், அரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள குதிரைகள் தேசிய ஆராய்ச்சி மையத்துக்கும், உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

பாதுகாப்பான கவச உடைகள் அணியாமல் எந்த ஒரு விலங்கு பராமரிப்பாளரும் விலங்குகள் அருகில் செல்லக்கூடாது. அவற்றுக்கு தீனி போடுகிறபோதுகூட பராமரிப்பாளர்கள் மிக அருகில் செல்ல வேண்டாம்.

அதிக ஆபத்துள்ள நோய்க்கிருமிகளை கையாளத்தேவையான அனைத்து உயிர்காப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நெறிமுறைகளின்படி பின்பற்றப்பட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Next Story