இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 4 நாளில் இரு மடங்கானது


இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 4 நாளில் இரு மடங்கானது
x

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 நாளில் இரு மடங்காக உயர்ந்தது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவது கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 4 நாட்களில் இரட்டிப்பாகி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரம் சொல்கிறது.

7.4 நாட்களில் எத்தனைபேர் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று கணிக்கப்பட்டிருந்ததோ, அத்தனை பேர் 4.1 நாளிலே பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இது, அந்த வைரஸ் பாதிப்பு, 4 நாளில் இரு மடங்காகி உள்ளதைக் காட்டுகிறது.

இதற்கிடையே மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால் டெல்லியில் அளித்த பேட்டியில் வெளியிட்ட புள்ளிவிவரம், நேற்றுமுன்தினம் தொடங்கி நேற்று வரை (24 மணி நேரத்தில்) பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 700-ஐ எட்டி இருப்பதையும், பலியானவர்கள் எண்ணிக்கை 100-ஐ கடந்து வேகமாக சென்று கொண்டிருப்பதையும் காட்டுகிறது.

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி இயக்குனர் ரன்தீப் குலேரியா, கொரோனா பாதித்தவர்கள் பற்றி கருத்து தெரிவிக்ககையில், “நாட்டின் சில பகுதிகளில் உள்ளூர் அளவிலான சமூக பரவல் நடைபெற்றுள்ளது” என குறிப்பிட்டார்.

மேலும், டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட அதன் உறுப்பினர்களும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர் களும் என 25 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்கள் நாடு முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர் என மத்திய சுகாதாரத்துறையின் மற்றொரு இணைச் செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா, நிருபர்களிடம் தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது:-

தப்லிக் ஜமாத் அமைப்பின் வெளிநாட்டு உறுப்பினர்கள் வந்து தங்கிய காரணத்தால் அரியானா மாநிலத்தில் 5 கிராமங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அங்கு வசித்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோரின் சிகிச்சையில் மருத்துவ ஆக்சிஜன் மிக முக்கியமானது ஆகும். நாடு முழுவதும் இதன் வினியோகமும், இருப்பும் சீராக இருக்க வேண்டும்.

இதை வலியுறுத்தி மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை செயலாளர் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தில், அவர் இந்த நெருக்கடியான தருணத்தில் மருத்துவ ஆக்சிஜன் வினியோகமும், இருப்பும் தடையின்றி இருக்குமாறு பார்த்துக் கொண்டு வருமாறு கூறி உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story