கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது; ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? - மத்திய அரசு தீவிர பரிசீலனை
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஊரடங்கை நீட்டிப்பது பற்றி மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுடெல்லி,
சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாததால், இந்த நோய்க்கிருமி பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் போராடிக்கொண்டு இருக்கின்றன.
இந்தியாவில் கொரோனா காட்டுத்தீ போல் வேகமாக பரவ தொடங்கியதால், அதை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி கடந்த 24-ந் தேதி இரவு அறிவித்தார். ஊரடங்கு அமலுக்கு வந்தபோது இந்தியாவில் கொரோனாவால் 519 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். 9 பேர் உயிரிழந்து இருந்தனர்.
ஊரடங்கை தொடர்ந்து மாநில, மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டு உள்ளன. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டு பஸ், ரெயில் உள்ளிட்ட அனைத்து வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு உள்ளன. மருத்துவம், குடிநீர், பால் சப்ளை போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால் கடந்த 14 நாட்களாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள்.
தவிர்க்க முடியாத பணியை தவிர வேறு எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ள போதிலும் சிலர் அதை பொருட்படுத்தாமல் நடந்து கொள்வதை காண முடிகிறது.
இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனாவால் ஏற்படும் உயிர் இழப்புகளும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் சில மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் இல்லை என்றபோதிலும், கொரோனா பரவிய மாவட்டங்களில் அதன் தாக்கம் அதிகரித்தபடி உள்ளது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நேற்றுடன் 14 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், நாடு முழுவதும் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்து இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,420-ஐ தாண்டிவிட்டது. இதனால் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவது எப்படி? என்று தெரியாமல் அதிகாரிகள் திணறிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்தநிலையில் 21 நாள் ஊரடங்கு வருகிற 14-ந் தேதியுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. அதற்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது. அதற்குள் நோய்க்கிருமி பரவுவது கட்டுக்குள் வந்துவிடுமா? என்று தெரியவில்லை.
இதனால், 14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பல மாநிலங்களும், நிபுணர்களும் மத்திய அரசை கேட்டுக்கொண்டு இருப்பதாகவும், அதுபற்றி மத்திய அரசு யோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊரடங்கை நீட்டித்தால்தான் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்று பல மாநிலங்கள் கருதுகின்றன.
தேவைப்பட்டால் மத்திய பிரதேசத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அந்த மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறி உள்ளார். இதேபோல் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் டும், தங்கள் மாநிலத்தில் உடனடியாக ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்படமாட்டாது என்றும், படிப்படியாகத்தான் வாபஸ் பெறப்படும் என்றும் தெரிவித்து இருக்கிறார். தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவும், நாட்டில் கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கை நீட்டிக்குமாறு பிரதமரை கேட்டுக்கொள்ளப்போவதாக கூறி உள்ளார்.
அந்த கருத்தை உறுதிப்படுத்தும் வகையில், கொரோனாவுக்கு எதிராக போர் நெடியது என்றும், இதற்கு தயாராக இருப்பதோடு, சோர்வடைந்து விடக்கூடாது என்றும் நாட்டு மக்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டு உள்ளார். ஊரடங்கை திட்டமிட்டபடி முடித்துக்கொள்ளும் விவகாரத்தில், கடைசி ஒரு வார காலம் மிகவும் முக்கியமானது என்றும், அரசு என்ன முடிவு எடுத்தாலும் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறி உள்ளார்.
இதற்கிடையே, ஊரடங்கின் காரணமாக ஏற்கனவே பல நாட்கள் நாட்டில் உற்பத்தி முடங்கி பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. வேலை இல்லாமலும், வருமானம் இல்லாமலும் மக்கள் தவித்து வருகிறார்கள். குறிப்பாக அன்றாடம் வேலை செய்து பிழைப்பவர்களும், தொழிலாளர்களும் எதிர்காலத்தை பற்றிய அச்சத்துடன் இருக்கிறார்கள். ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் இன்னும் அதிகரிக்கும்.
என்றாலும் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தினால்தான், உயிரிழப்புகளை குறைக்கமுடியும் என்ற நிலை உள்ளது. எனவே ஊரடங்கை 14-ந் தேதிக்கு பிறகும் நீட்டிப்பதில் உள்ள சாதக-பாதகங்கள் பற்றி மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து மத்திய சுகாதார துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வாலிடம் நேற்று நிருபர் கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் பதில் அளிக்கையில், “ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. நீங்களாக எதுவும் ஊகித்துக் கொள்ளாதீர்கள்” என்றார்.
எனவே ஊரடங்கு நீட்டிக் கப்படுமா? இல்லையா? என்பது 14-ந் தேதிக்கு ஒரிரு நாட்களுக்கு முன்னர்தான் தெரியவரும் என்றும், ஊரடங்கு நீட்டிக்கப்படும் பட்சத்தில், கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என்றும் கருதப்படுகிறது.
ஊரடங்கையொட்டி கடந்த மாதம் 25-ந் தேதி முதல் வருகிற 14-ந் தேதி வரை ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது. 14-ந் தேதிக்கு பிறகு பயணம் செய்ய முன்பதிவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
ஆனால் ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் வாரணாசி-இந்தூர் காசி மகாகால் எக்ஸ்பிரஸ் மற்றும் லக்னோ-டெல்லி தேஜஸ், ஆமதாபாத்-மும்பை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கான முன்பதிவை வருகிற 30-ந் தேதி வரை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவுவது அதிகரித்து இருப்பதால் 30-ந் தேதி வரை இந்த ரெயில்கள் இயக்கப்படமாட்டாது என்று ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்து உள்ளது.
Related Tags :
Next Story