கொரோனாவில் இருந்து மருத்துவர்களை காக்க உதவும் ரோபோ கண்டுபிடிப்பு
கொரோனாவில் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை காக்கும் வகையிலான ரோபோவை பொறியியல் மாணவர் ஒருவர் கண்டுபிடித்து உள்ளார்.
ராய்ப்பூர்,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு தீவிர பணியாற்றி வருகிறது.
எனினும், நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் மேல் சென்றுள்ளது. தொடர்ந்து பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்துதல் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் பயன்தராத நிலையில் உள்ளன.
அதனுடன், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோருக்கும் நோய் பரவும் ஆபத்து உள்ளது. இதன் பாதிப்புக்கு ஆளாகும் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் மருத்துவர்களுக்கு உதவும் வகையிலான ரோபோ ஒன்றை சத்தீஷ்கார் மாநில பொறியியல் மாணவர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
சத்தீஷ்காரின் மகாசாமுண்ட் பகுதியை சேர்ந்தவர் யோகேஷ் குமார் சாகு. பொறியியலில் இறுதியாண்டு படித்து வரும் இவர், தனது இரு நண்பர்களுடன் இணைந்து ரோபோ ஒன்றை வடிவமைத்து உள்ளார்.
இதுபற்றி சாகு கூறும்பொழுது, ‘நோயாளிகளை காப்பதற்காக மருத்துவர்கள் தங்களது வாழ்க்கையை பணயம் வைக்கின்றனர். அவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என விரும்பினோம்.
அதனால் இந்த ரோபோவை உருவாக்கி உள்ளோம். இதற்கு ரூ.5 ஆயிரம் செலவானது. இந்த ரோபோவை நேரடியாக இன்டர்நெட் உடன் இணைக்க முடியும். இதன்பின்பு எந்த பகுதியில் இருந்தும் அதனை இயக்க முடியும்.
இதில் உள்ள கேமிரா வழியே நோயாளிகளுடன் மருத்துவர்கள் உரையாட முடியும். அவர்களுக்கு மருந்துகளையும் வழங்க முடியும் என கூறியுள்ளார். இதன் சிறப்பு என்னவெனில், நீங்கள் அதனுடன் பேச முடியும்.
இதனை உருவாக்குவது பற்றி யூ டியூப் வழியே நாங்கள் கற்று கொண்டோம். மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு படித்து வரும் மாணவனாக இருப்பது, இதனை கண்டுபிடிப்பதற்கு எனக்கு பேருதவியாக இருந்தது. மாநில மற்றும் மத்திய அரசு போதிய நிதியுதவியை எங்களுக்கு வழங்க வேண்டும். இதனால், மக்கள் மற்றும் குறிப்பிடும்படியாக மருத்துவர்களுக்கு உதவ கூடிய ரோபோக்களை நாங்கள் உருவாக்க முடியும்’ என கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆபத்தின்றி சிகிச்சை வழங்க உதவும் நோக்கில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story