அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி வரும் 11ந்தேதி ஆலோசனை


அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி வரும் 11ந்தேதி ஆலோசனை
x
தினத்தந்தி 8 April 2020 5:57 PM IST (Updated: 8 April 2020 5:57 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி வருகிற 11ந்தேதி அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்வர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவ துறையினர் என பல தரப்பினருடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் வசதி மூலம் உரையாடி வருகிறார்.

தொலைக்காட்சி, பத்திரிகை ஆசிரியர்கள், ரேடியோ ஜாக்கிகளுடனும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.  இதனை தொடர்ந்து நாட்டின் முன்னணி சமூக மற்றும் மத அமைப்பினர், உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் அவர் உரையாடினார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த உரையாடலில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 5 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சியின் குழு தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்திற்கு பின் பிரதமர் மோடி கூறும்பொழுது, நாட்டில் ‘சமூக நெருக்கடி’ போன்ற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.  அதனால் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது.  நாம் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.  மாநிலங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நிபுணர்கள் அனைவரும், கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கூறி வருகின்றனர் என கூறினார்.

இதனையடுத்து, பிரதமர் மோடி வருகிற 11ந்தேதி அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.  இந்த கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் எந்தெந்த பகுதிகளில் ஊரடங்கை அமல்படுத்துவது போன்றவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

Next Story