கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க உதவும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து போதிய அளவு கையிருப்பில் உள்ளது - மத்திய அரசு தகவல்
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து போதிய அளவு கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
கொரோனா வைரசுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். மலேரியா காய்ச்சலை குணப்படுத்த உதவும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்ற மருந்து, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தற்போது பயன்படுத்தப்படுகிறது. இதற்கு நல்ல பலன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் உலகம் முழுவதும் இந்த மருந்துக்கான தேவை அதிகரித்து உள்ளது.
உலகிலேயே ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து தயாரிப்பில் இந்தியாதான் முன்னணியில் இருக்கிறது. உலகில் உற்பத்தியாகும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தில் 70 சதவீதம் இந்தியாவில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்திய மருந்து கம்பெனிகள் ஆண்டுக்கு 40 டன் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை தயாரிக்கின்றன. இதன்மூலம் 200 மில்லிகிராம் எடையுள்ள 20 கோடி மாத்திரைகளை தயாரிக்க முடியும்.
கொரோனா பாதிப்பின் காரணமாக ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தின் தேவை அதிகரித்ததால், அந்த மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. இந்த நிலையில், கொரோனாவின் தாக்கத்தை சமாளிப்பதற்காக பல்வேறு நாடுகளும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துக்காக இந்தியாவின் உதவியை நாடி உள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பும், தங்கள் நாட்டுக்கு இந்த மருந்தை வழங்குமாறு பிரதமர் மோடியை கேட்டுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து, ஹைட்ராக்சிகுளோரோகுயின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை கடந்த செவ்வாய்க் கிழமை இந்தியா நீக்கியது. அதன்பிறகு, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் முன்வந்தன.
இதனால், இந்தியாவில் இந்த மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று அச்சம் தெரிவித்த சிலர், உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்த பின்னரே மற்ற நாடுகளுக்கு வழங்கவேண்டும் என்றும் கூறினார்கள்.
இந்த நிலையில், நம் நாட்டில் போதிய அளவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதுகுறித்து தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையத்தின் தலைவர் சுப்ரா சிங் கூறியதாவது:-
இந்தியாவிடம் தேவையான அளவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து உள்ளது. தற்போது நாட்டில் இந்த மருந்துக்கான தேவை எவ்வளவு? எவ்வளவு உற்பத்தி செய்யப்படுகிறது? மார்கெட்டுக்கு எவ்வளவு தேவைப்படுகிறது? என்பதை தினந்தோறும் அரசு கண்காணித்து வருகிறது.
உள்நாட்டில் தட்டுப்பாடு இன்றி இந்த மருந்து கிடைப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்குத்தான் நாம் முன்னுரிமை அளிக்கிறோம். உள்நாட்டு தேவைக்கு போக மீதம் உள்ள மருந்துதான் ஏற்றுமதி செய்யப்படும்.
மருத்துவர்களின் ஆலோசனையின்படிதான் இந்த மருந்தை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story