சுகாதார பணியாளர்கள்தான் உண்மையான தேச பக்தர்கள் - ராகுல் காந்தி புகழாரம்


சுகாதார பணியாளர்கள்தான் உண்மையான தேச பக்தர்கள் - ராகுல் காந்தி புகழாரம்
x
தினத்தந்தி 10 April 2020 11:54 PM GMT (Updated: 10 April 2020 11:54 PM GMT)

சுகாதார பணியாளர்கள்தான் உண்மையான தேச பக்தர்கள். அவர்கள் உயிரை பணயம் வைத்து அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார்கள் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா வைரசை விட அதுதொடர்பான அச்சமும், தவறான தகவல்களும்தான் பெரிய ஆபத்தாக உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், சமூக சுகாதார பணியாளர்கள், நர்சுகள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோருக்கு, கொரோனா வைரசின் ஆபத்துகள் குறித்தும், அது பரவும் விதம் குறித்தும் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது.

அவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன், துணிச்சலுடன் தங்கள் உயிரை பணயம் வைத்து, கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னணியில் செயல்படுகிறார்கள்.

தேசபக்தி என்பது, தேவையான காலத்தில் நாட்டுக்கு சேவை செய்வது ஆகும். எனவே, சமூக, சுகாதார பணியாளர்கள்தான் உண்மையான தேச பக்தர்கள் ஆவர்.

தனிப்பட்ட தியாகங்களுக் காக அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் நாம் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். அவர்கள் விளம்பர வெளிச்சம் இல்லாமல், இந்த சிக்கலான நேரத்தில் நம்மை பாதுகாக்க தொய்வின்றி பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் பிரச்சினை முடிந்தவுடன், அவர்கள் பணிச்சூழ்நிலை முற்றிலும் மாறுவதற்கு அவர்களது அபரிமிதமான சேவையே காரணமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நாட்டுக்கு ஆற்றி வரும் சேவைக்காக ஒவ்வொரு சுகாதார பணியாளரையும் வணங்குகிறேன். கொரோனா வைரசில் இருந்து அவர்களும், அவர்களுடைய குடும்பமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Next Story