யாரும் பசியை எதிர்கொள்ளக்கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்; பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்


யாரும் பசியை எதிர்கொள்ளக்கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்; பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்
x
தினத்தந்தி 13 April 2020 2:06 PM GMT (Updated: 13 April 2020 2:06 PM GMT)

ஊரடங்கு காரணமாக பட்டினியில் யாரும் இருக்கக் கூடாது என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த நேரத்தில்,  யாரும் பட்டினியை எதிர்கொள்ளக் கூடாது என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். சோனியா காந்தி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;- தேசிய உணவு பாதுகாப்பு  சட்டத்தின் கீழ், ஏப்ரல் முதல் ஜூன் வரை கூடுதலாக  5 கிலோ தானிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற உங்களின் முடிவை நான் வரவேற்கிறேன்.  

அதேசமயம், ஊரடங்கு உத்தரவு காரணமாக விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பயன்பெறுவோருக்கு மேலும் மூன்று மாதங்களுக்கு, அதாவது செப்டம்பர் மாதம் வரை நபர் ஒருவருக்கு தலா 10 கிலோ உணவு தானியங்களை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊரடங்கால் லட்சக்கணக்கான மக்கள் உணவுக்கு நிச்சயற்ற தன்மையை எதிர்கொண்டுள்ளனர். எனவே, ரேஷன் அட்டை இல்லாதவர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்க வேண்டும். கொரோனா வைரஸுக்கு எதிரான போரின் காரணமாக, நாட்டில் யாரும் பசி, பட்டினிக்கு ஆளாகவில்லை என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.


Next Story